பக்கங்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஓரிறைக் கோட்பாடு 7522-7546

ஓரிறைக் கோட்பாடு


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7522இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங்களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களின் வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தை நீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக் கொண்டிருக்கிறீர்கள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7523இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்காதீர்கள்? உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம் தான் இறைச்செய்திகளிலேயே புதியதும், கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக்கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன் மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா?
(அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர் கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7524ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், '(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனம் குறித்து விளக்கும்போது 'நபி(ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தினால்) தம் உதடுகளை அசைத்துக் கொண்டிருப்பார்கள்' என்று கூறினார்கள்.
-இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்' என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியத
அப்போதுதான் அல்லாஹ் '(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவரச அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்' எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான். மேலும், 'நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீங்கள் காதுதாழ்த்தி மெளனமாக இருந்து கேளுங்கள். 'பின்னர் உங்களை ஓதச் செய்வது நம்முடைய பொறுப்பாகும்.'
(இதன் பின்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக் காட்டியதைப் போன்றே ஓதுவார்கள். 164


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7525 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் '(நபியே!) உங்கள் தொழுகையில். நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு 'நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்கள். ஏனெனில், அதைக் கேட்கும் இணைவைப்பாளர்கள் குhஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உங்கள் நண்பர்களுக்கே கேட்காத அளவிற்கு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்' எனக் கட்டளையிட்டான்.165


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7526ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்' எனும் இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது.
இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.166


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7527 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில், 'இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்கள் எனக் கூடுதலாக வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7528 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக்கண்ட) மற்றொருவர், 'இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கு வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!' என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், 'இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்' என்கிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7529 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.168


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7530 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நம்மில் (இறைவழியில்) கொல்லப்படுகிறவர் சொர்க்கத்திற்குச் செல்கிறார்' எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169
இதை ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7531ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் '(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீங்கள் எடுத்துரைக்கவில்லை என்றாம்விடும்' என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 05:67)170
இதை மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7532அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! உயர்ந்தோன் அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் எது?' என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வணங்குவதாகும்' என்று பதிலளித்தார்கள். அவர், 'பிறகு எது?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்' என்று பதிலளித்தார்கள். அவர், 'பிறகு எது?' என்று கேட்க, நபியவர்கள் 'உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயலைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமைநாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்' எனும் வசனத்தை (திருக்குர்ஆன் 25:68) அருளினான்.171


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7533 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். 'தவ்ராத்' வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு 'கீராத்' வழங்கப்பெற்றது. பின்னர் 'இன்ஜீல்' வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு 'கீராத்' வழங்கப்பெற்றது.
பிறகு உங்களுக்குக் குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், 'இவர்கள் வேலை செய்தோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்' என்று கூறினர். அதற்கு அல்லாஹ், 'நான் உங்களுக்குரிய உரிமை(கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?' என்று கேட்க, அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், 'அது (-முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்' என்று சொன்னான். 174


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7534இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், தாய் தந்தையருக்கு நன்மை புரிவதும், பின்னர் இறைவழியில் அறப்போரிடுவதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.175
இதை அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7535அம்ர் இப்னு தஃக்லிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறு சிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்றவர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அவர்கள், 'நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன். மற்றொருவரைவிட்டுவிடுகிறேன். நான் எவருக்குக் கொடுக்கிறேனோ அவரை விட நான் எவரைவிட்டுவிடுகிறானோ அவர் தாம் எனக்கு மிகவும் பிரியமானவராவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல்விட்டுவிடுகிறேன். அத்தகையை (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தாம் அம்ர் இப்னு தஃக்லிப்' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்கு பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன். 176


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7536நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்.
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7537அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன்' என்று அல்லாஹ் கூறுவதாக ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.177
இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து 'நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7538அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகிறான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும். 178


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7539இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: '(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ் இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்' என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனுஸ்) இப்னு மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 179


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7540ஷுஅபா இப்னு அல்ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்:
முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகம் ஒன்றின் மீது இருந்தபடி 'அல்ஃபத்ஹ் எனும் (48 வது) அத்தியாயத்தை' அல்லது 'அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை' ஓதிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'தர்ஜீஉ' எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள்' எனக் கூறிவிட்டு, இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள்.
பிறகு, 'உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதிய வித்தை இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன்' என்றார்கள். நான், முஆவியா(ரஹ்) அவர்களிடம், 'அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி?' என்று கேட்க ('ஆ' எனும் இடத்தில்) 'ஆ..ஆ..ஆ..' என்று மும்முறை (இழுத்து) அவர்கள் ஓதினார்கள்' என்றார்கள்.180


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7541அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) அறிவித்தார்.
(ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து வரச் சொன்னார். பின்னர் நபி(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைப் படி(க்குமாறு ஆணைபிறப்பி)த்தார். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமான முஹம்மதிடமிருந்து மன்னர் ஹெராக்ளியஸுக்கு எங்களுக்கும் உங்களுக்கம் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். 181


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7542அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கம், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (திருக்குர்ஆன் 02:136)182


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7543இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம், 'நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?' என்று கேட்க, அவர்கள் 'இருவரின் முகங்களிலும் கரும்புள்ளியிட்டு இருவரையும் கேவலப்படுத்திவிடுவோம்' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவர்கள் அதை கொண்டுவந்து தாங்கள் விரும்பிய ஓர் (ஓற்றைக் கண்) மனிதரிடம் 'ஒற்றைக் கண்ணரே! ஓதும்!' என்று கூறினார்கள். அவர் ஓதிக் கொண்டே சென்றார். அதில் ஓரிடத்தை அடைந்ததும் அந்த இடத்தில் தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டார். நபி(ஸல்) அவர்கள், 'கையை எடுங்கள்' என்று கூற அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை (ரஜ்கி) தொடர்பான வசனம் 'பளிச்' சென்று தெரிந்தது. அந்த மனிதர் 'முஹம்மதே! இந்த இருவரையும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆயினும், நாங்கள் அதை எங்களுக்கிடையே பரஸ்பரம் மறைத்துக்கொண்டிருந்தோம்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கல்லால் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட, அவ்வாறே அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். (தண்டனை நிறைவேற்றப்பட்டபோது) அந்த ஆண் அப்பெண்ணின் மீது (கவிழ்ந்து அவளின் மீது) கல் விழாமல் பாதுகாக்க முயல்வதை கண்டேன்.183


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7544 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று, வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7545இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்)அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள்.
ஆயிஷா(ரலி) கூறினார்: நான் (உடல் நலம் குன்றி) படுக்கையில் கிடந்தேன். நான் குற்றமற்றவள் என்பதையும் அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிப்பான் என்பதையும் அப்போதே அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என் விஷயத்தில் (என்னைக் கலங்கமற்றவள் என்று எடுத்துரைக்க காலங் காலமாக) ஓதப்படுகிற வேத அறிவிப்பு ஒன்றை அருள்வான் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. ஆனால், வலிவும், மகத்துவமும் மிக்க அல்லாஹ், 'அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்' என்று தொடங்கும் (24 வது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான். 185


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7546பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் 'வத்தீனி வஸ்ஸைத் தூனி..' எனும் (95 வது) அத்தியாயத்தை ஓதுவரை கேட்டேன். நபி(ஸல்) அவர்களை விடவும் 'அழகிய குரலுடையவரை' அல்லது 'அழகாக ஓதுபவரை' நான் கண்டதில்லை.186


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக