பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

இறைவேதத்தையும் நபிவழியையும் 7268-7294

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268
தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! 'இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கெண்டிருப்போம்' என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது' என்றார்கள்.2


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7269அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பாக ஏகத்துவ உறுதிமொழியைக் கூறினார்கள். பிறகு 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் (கூறுகிறேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக்கொண்டு உங்கள் தூதரை வழி நடத்தினானோ அதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்; நேர்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நேர் வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்' என்றார்கள்.3


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7270இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, 'இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக' என்றுசொன்னார்கள்.4


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7271அபூ பர்ஸா அல்அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் வாயிலாகவும் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாயிலாகவும் 'தன்னிறைவு கொள்ளச் செய்தான்' அல்லது 'உயர்வாக்கினான்'.5
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: இவ்விடத்தில் 'தன்னிறைவு கொள்ளச் செய்தான்' என்றே இடம்பெற்றுள்ளது. ஆனால், 'உயர்வாக்கினான்' என்றே இருக்கவேண்டும். இதே தலைப்பிலுள்ள என்னுடைய தனி நூலின் மூலத்தில் காண்க.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7272அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து (பின்வருமாறு) எழுதினார்கள்: நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறைப்படியும் என்னால் இயன்றவரை உங்கள் கட்டளைகளைச் செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.6


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7273 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பெற்று அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றியும் மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. (நேற்றிரவு) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என்னுடைய கையில் வைக்கப்பெற்றதை கண்டேன்.
இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்; நீங்கள் அவற்றை இயன்றவாறெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' அல்லது 'நீங்கள் அவற்றைப் பரும்க் கொண்டிருக்கின்றீர்கள்' என்று, அல்லது அதைப் போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்.8


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7274 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7275அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இந்தப் (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா இப்னு உஸ்மான்(ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள். உமர்(ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள், 'நான் தங்கம் மற்றும் வெள்ளி எதையும் மக்களிடையே பங்கிடாமல் கஅபாவில்விட்டுவைக்கலாகாது என விரும்பினேன்' என்று கூறினார்கள். நான், 'உங்களால் அப்படிச் செய்ய முடியாது' என்று கூறினேன். அவர்கள், 'ஏன் முடியாது?' என்று கேட்டார்கள். நான், 'உங்கள் தோழாகள் (நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவரும் அப்படிச் செய்யவில்லையே' என்று சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், 'அவ்விருவரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7276 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத் தன்மை வானிலிருந்துவந்து இடம் பிடித்தது. (அதற்கேற்ப) குர்ஆனும் அருளப்பெற்றது. குர்ஆனை மக்கள் படித்தார்கள். (அதிலிருந்து அதை அறிந்து கொண்டார்கள்.) மேலும், என்னுடைய வழிமுறையிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள்.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.10


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7277அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.11
என முர்ரா அல்ஹமதானீ(ரஹ்) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7278-7279அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்' என்று நபியவர்கள் சொன்னார்கள்.12


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7280அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7281ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை' என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்று சொல்ல, மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் - கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்' என்று விளக்கமளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் '(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறிவந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)' என்று கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7282ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
இறைவேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள் (அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிகமாக முன்னுக்கு கொண்டு கொல்லப்படுவீர்கள். (அந்த நேர்பாதையை விடுத்து) வலப் பக்கமோ இடப்பக்கமோ (திசை மாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழிதவறிச் சென்றுவிடுவீர்கள்.
இதை ஹம்மாம் இப்னு அல்ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7283 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று 'நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடிவந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். எனவே தப்பித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார். அப்போது அவரின் சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். அவரை நம்ப மறுத்தனர்; தம் இடத்திலேயே தங்கிவிட்டனர். எனவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர். இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டு வந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.13


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7284-7285  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர் அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும்வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ருலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்iயும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்' என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில், (கயிறு என்பதற்க பதிலாக) 'ஒட்டகக் குட்டி' என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7286அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா இப்னு பத்ர்(ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ் இப்னி ஹிஸ்ன்(ரலி) அவர்களிடம் தங்கினார்கள். உமர்(ரலி) அவர்கள் தம் அருகே (தமக்கு நெருக்கமாக) வைத்துக் கொள்பவர்களில் ஒருவராக ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்கள் இருந்தார்கள். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும் (குர்ஆனையும் ஹதீஸையும்) கற்றறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையோராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா(ரலி) அவர்கள் தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! இந்தத் தலைவர் (உமர்(ரலி) அவர்களிடம் உனக்கு செல்வாக்கு உள்ளதா? அப்படி இருந்தால் நான் அவரிடம் செல்ல எனக்காக நீ அனுமதி பெற்றுத் தா' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல உங்களுக்காக நான் அனுமதி கோருகிறேன்' என்றார். அவ்வாறே உயைனாவுக்காக ஹுர்ரு இப்னு கைஸ் அனுமதி கேட்டார்கள்.
உயைனா(ரலி) அவர்கள் உள்ளே சென்றவுடன், 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை; எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை' என்றார். உடனே உமர்(ரலி) அவர்கள் கோபமடைந்து அவரை அடிக்க முன்வந்தார்கள். அப்போது ஹுர்ரு அவர்கள், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக நன்மை புரியுமாறு ஏவுவீராக. அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறிவீனர்களில் ஒருவராவார்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதி காட்டியபோது உமர் அதை மீறவில்லை. (பொதுவாகவே) உமர் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படுபவர்களாய் இருந்தார்கள்.15


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7287அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார்.16


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7288 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7289 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7290ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. எனவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். எனவே (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள், '(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்களின் மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீங்கள் தொழுது (இரவுத்) தொழுகை உங்களின் மீது கடமையாக ஆக்கப்பட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.18


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7291அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, '(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்' என்றார்கள். உடனே ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஹுதாஃபாதாம் உன் தந்தை' என்றார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'ஷைபா வால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தாம் உன் தந்தை' என்றார்கள். (இக்கேள்விகளால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர்(ரலி) அவர்கள் கண்டபோது, 'நாங்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்று கூறினார்கள்.19


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7292 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
முஆவியா(ரலி) அவர்கள், முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு எழுதி அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள் பின்வருமாறு முஆவியா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும், அல்லாஹுவைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது' என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.
மேலும், முஆவியா(ரலி) அவர்களுக்கு முஃகீரா(ரலி) அவர்கள் எழுதினார்கள்: நபி(ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றைப்) பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுததவருக்குரியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கோருவது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.20


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7293அனஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், 'வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடுhது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது' என்றார்கள்.21


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7294அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) வெளியே வந்து லுஹ்ர் தொழுகை தொழுகை நடத்தினார்கள், (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்த பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி உலக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு, 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் (என்னிடம்) அவர் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்' என்றும் சொன்னார்கள். அப்போது மக்களின் அழுகை அதிகமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கேளுங்கள் என்னிடம்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் எங்கு செல்வேன் (சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நரகத்திற்கு' என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்கள் எழுந்து, 'என் தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'உன் தந்தை ஹுதாஃபா' என்று கூறிவிட்டு, கேளுங்கள் என்னிடம்! கேளுங்கள் என்னிடம்' எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (நபியவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து 'அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்' என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறியபோது மெளனமாக இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்னர் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சற்று முன் நான் தொழுது கொண்டிருக்கையில் இந்தச் சுவற்றில் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை' என்றார்கள்.22


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக