பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

இறைவேதத்தையும் நபிவழியையும் 7320-7344


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7320அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.50


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7321 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அநியாயமாகக் கொல்லப்படும் எந்த (மனித) உயிராயினும் அ(தைக் கொலை செய்த பாவத்)தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் நிச்சயம் ஒரு பங்கு இருந்தே தீரும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் ஹுமைத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள், 'அதன் கொலையி(ன் பாவத்தி)லிருந்து' என்று சிலவேளை கூறுவார்கள். ஏனெனில், அவர் (-ஆதமின் முதல் மகனான காபீல்) தாம் மனித சமுதாயத்திலேயே முதன் முதலாகக் கொலை செய்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர்.52


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7322ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்' என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் மீண்டும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) கிளம்பிச் சென்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மதீனா கொல்லனின் உலை போன்றது; தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களை அது தூய்மைப்படுத்துகிறது' என்றார்கள்.54


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7323இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்னான், 'இறைநம்பிக்கையர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சப்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும் வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப்போகிறேன்' என்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) சம்பந்தமான வசனம் இருந்தது' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.55


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7324முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நாங்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு 'அடடா! அபூ ஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்)' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7325அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுண்டா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஆம் (கலந்து கொண்டிருக்கிறேன்). நபி(ஸல்) அவர்களுடன் (சொந்தம் காரணமாக) எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திரப்பின் சிறுவனாக இருந்த நான் நபியவர்களுடன் (பெருநாள் தொழுகையில்) கலந்து கொண்டிருக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் (பெருநாளில் வீட்டில் இருந்து புறப்பட்டு) கஸீர் இப்னு ஸல்த் உடைய வீட்டருகே உள்ள அடையாளமிடப்பட்ட இடத்திற்கு வந்து தொழுகை நடத்தினார்கள். பிறகு உரையாற்றினார்கள். பாங்கு சொல்லவுமில்லை; இகாமத் சொல்லவுமில்லை. பிறகு (உரையில்) தர்மம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். உடனே, பெண்கள் தம் காதுகள் மற்றும் கழுத்துகளின் பக்கம் தம் கைகளைக் கொண்டு சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் அப்பெண்களிடம் சென்று (அவர்களின் காதணிகளையும் கழுத்தணிகளையும் சேகரித்துக்கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்தார்கள்.56


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7326இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'குபா' பள்ளிவாசலுக்கு நடந்தும் (வாகனத்தில்) பயணம் செய்தும் செல்வது வழக்கம்.57


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7327உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம், 'என்னை (நான் இறந்த பின்) என் தோழிகளுடன் (-நபியவர்களின் இதர துணைவியருடன்) அடக்கம் செய்யுங்கள். நபி(ஸல்) அவர்களுடன் (என்) வீட்டில் அடக்கம் செய்யாதீர்கள். ஏனெனில், நான் (மற்றவர்களால் என் தோழியரை விட) உயர்வாகக் கருதப்படுவதை விரும்பவில்லை' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7328உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'என் தோழர்கள் (முஹம்மத்(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்' என்று கேட்டு ஆளனுப்பினார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், 'சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)' என்றார்கள். ஆனால், (முற்ற தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், 'முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்' என்று கூறிவிடுவார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7329அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மதீனாவின் (புறநகர்ப் பகுதிகளிலுள்ள) மேட்டுக் கிராமங்களுக்குச் செல்வார்கள். அப்போது சூரியன் (மேற்கே) உயர்ந்தே இருக்கும்.
மற்றோர் அறிவிப்பில், 'அந்த மேட்டுக் கிராமங்களின் தூரம் (மதீனாவிலிருந்து) நான்கு அல்லது மூன்று மைல்களாகும்' என்று கூறப்பட்டுள்ளது. 58


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7330சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தின் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1ஃ3) கொண்டதாக இருந்தது. பின்னர் (உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் தான்) அதன் அளவு அதிகமாக்கப்பட்டது.59


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7331அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவா! மதீனாவாசிகளுக்கு அவர்களின் முகத்தலளவையில் வளத்தை அருள்வாயாக! அவர்களின் 'ஸாஉ' மற்றும் 'முத்'(து) ஆகிய அளவைகளிலும் அவர்களுக்கு வளத்தை அருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.60


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7332இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் விபசாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் (தீர்ப்புக்காக) அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட அவ்வாறே அவ்விருவருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் சடலங்கள் (ஜனாஸாக்கள்) வைக்கப்படும் இடத்திற்கு அருகே கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.61


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7333அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, 'இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்' என்றார்கள்.62
'இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம்' என்ற இதே நபிமொழியை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7334ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கிப்லா திசையிலுள்ள சுவருக்கும் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே ஆடு ஒன்று புகுந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது.63


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7335 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) என்னுடைய (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.64


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7336அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு 'ஹஃப்யா' எனுமிடத்திலிருந்து 'ஸனிய்யத்துல் வதாஉ' மலைக்குன்று வரையாக இருந்தது. மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு 'ஸனியத்துல் வதா' மலைக்குன்றிலிருந்து 'பன} ஸுரைக்' குலத்தாரின் பள்ளிவாசல் வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில். பங்கெடுத்தவர்களில் ஒருவனாயிருந்தேன்.65


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7337இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உமர்(ரலி) அவர்கள் கூற கேட்டுள்ளேன்.66
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7338சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7339உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள் (ஒரு பாத்திரத்தைக் காட்டி), 'இந்தப் பாத்திரம் நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் குளிப்பதற்காக வைக்கப்பட்டு வந்தது. நாங்கள் இருவரும் ஒரு சேர இதில் குளிக்கத் தொடங்குவோம்' என்று கூறினார்கள்.67


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7340அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கும் குறைஷிகளுக்கும் இடையே மதீனாவில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.68


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7341மேலும், நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (நிராயுதபாணிகளான நபித்தோழர்களை வஞ்சகம் செய்து கொலை செய்த) பன} சுலைம் குலத்தாரின் சில குடும்பங்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.69

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7342அபூ புர்தா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், 'வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி(ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்' என்றார்கள். எனவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள். பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களின் பள்ளிவாசலில் தொழுதேன்.70


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7343உமர்(ரலி) அறிவித்தார்.
'என் இறைவனிடமிருந்து வரக்கூடிய (வான)வர் இன்றிரவு என்னிடம் வந்து, இந்த சுபிட்சம் மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக (ஹஜ்ஜுல் கிரான் செய்வதாக)ச் சொல்வீராக என்று கூறினார்' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் பள்ளத்தாக்கில் இருந்தபோது என்னிடம் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் 'ஹஜ்ஜில் உம்ராவைச் சேர்ப்பதாக..' என்று இடம் பெற்றுள்ளது.71


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7344இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு 'கர்ன்' எனுமிடத்தையும், ஷாம் வாசிகளுக்கு 'ஜுஹ்ஃபா'வையும் மதீனாவாசிகளுக்கு 'துல்ஹுலைஃபா'வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித்தார்கள்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான், செவியேற்றேன். மேலும், 'நபி(ஸல்) அவர்கள், 'யலம்லம்' எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற்குரிய) இடமாகும்' என்று கூறினார்கள் என எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில் இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், அந்நாளில் இராக் (வாசிகளிடையே முஸ்லிம்கள்) இருக்கவில்லை' என்று கூறினார்கள்.72


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக