ஓரிறைக் கோட்பாடு
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7497அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள்) 'இதோ கதீஜா உங்களிடம் 'உணவுப் பத்திரத்தை' அல்லது 'பானமுள்ள பாத்திரத்தை' கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரின் இறைவனிடமிருந்து சலாம் எடுத்துரையுங்கள். கூச்சலோ களைப்போ இல்லாத முத்து மாளிகையொன்று அவருக்கு (சொர்க்கத்தில்) கிடைக்கும் என்று நற்செய்தி அளியுங்கள்' என்றார்கள்.139
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7498 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்' என்று அல்லாஹ் கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.140
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7499இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் 'தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள். பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை. இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்புகிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடம் நீதி கேட்டேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன் வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை.141
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7500ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசியபோது, ஆயிஷா(ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்கள் சொன்ன அவதூறிலிருந்து அவர்களை அல்லாஹ் விடுவித்துவிட்டான். இச்செய்தி குறித்து நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு அபீ வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.
...ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிக்க, ஓதப்படுகிற வேத அறிவிப்பை அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், உயர்ந்தோன் அல்லாஹ் (நான் தூய்மையானவள் என்பது குறித்து) 'அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்...' என்று தொடங்கும் (24 வது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான்.142
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7501 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.143
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7502 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் 'சற்று பொறு' என்றான். 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்றது உறவு. உடனே அல்லாஹ் '(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்றது உறவு. 'இது உனக்காக நடக்கும்' என்றான் அல்லாஹ்.
(இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.144
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7503ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஒரு நாள்) மழைபொழிந்தது. அப்போது அவர்கள், 'என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கிறான்; என்னை நம்புகிறவனும் இருக்கிறான் என்று அல்லாஹ் கூறினான்' என்றார்கள்.145
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7504 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க விரும்புகிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறுக்கிறேன். 146
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7505 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.147
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7506 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் 'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்' என்று சொல்லி(விட்டு இறந்து)விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, 'நீ எதற்காக இப்படிச் செய்தாய்?' என்று கேட்டான். அதற்கு அவர், 'உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்' என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். 148
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7507 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் என்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்' என்று சொன்னான்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7508அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'முன் சென்ற' அல்லது 'உங்களுக்கு முன் வாழ்ந்த' ஒரு மனிதரைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அந்த மனிதருக்கு செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் 'நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?' என்று கேட்க, அவர்கள் 'நல்ல தந்தையாக இருந்தீர்கள்' என்றார்கள். ஆனால், அவரோ தம(து மறுமை)க்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் 'தயார் செய்திருக்கவில்லை'. அல்லது 'சேமித்திருக்கவில்லை'. தம் மீது அல்லாஹ்வுக்கு சக்தி ஏற்பட்டால் தம்மை அவன் வேதனை செய்வான் என அவர் அஞ்சினார். எனவே, (அவர் தம் மக்களிடம்) 'நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கிவிடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிய பின் என்னைப் பொடிப் பொடியாக்கி, சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்' என்றார்.
நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: இவ்வாறு அம்மனிதர் தம் மக்களிடம் அதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டார். என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பிறகு அவரின் சாம்பலை சூறாவளிக் காற்று வீசிய ஒரு நாளில் தூவிவிட்டார்கள். அப்போது வல்லவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ் '(பழையபடி முழு மனிதராக) ஆம்விடு' என்று சொல்ல, அந்த மனிதர் (உயிர் பெற்று) எழுந்தார். அல்லாஹ் 'என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?' என்று கேட்டான். அம்மனிதர் 'உன் அச்சத்தின் காரணத்தால் தான்' என்று பதிலளித்தார். அவரை அந்த நேரத்தில் அல்லாஹ்வின் கருணை தான் காப்பாற்றியது.
மற்றோர் அறிவிப்பில் 'கடலில் தூவி விடுங்கள்' என அம்மனிதர் கூறினார் என்று காணப்படுகிறது.
வேறோர் அறிவிப்பில் (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'லம் யப்தயிஸ்' எனும் சொல்லுக்கு கத்தாதா(ரஹ்) அவர்கள் சேமித்து வைக்கவில்லை' என்று விளக்கம் தருகிறார்கள். 149
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7509 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் 'என் இறைவா! எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் 'எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக' என்று மீண்டும் பிரார்த்திப்பேன்.
இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('சிறிதளவேனும்' என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது' என்று கூறினார்கள்.150
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7510 மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்:
முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்' என்று சொல்வார்கள்.
உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்லப்படும்.
நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.)
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், '(ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூ கலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும்!' என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹஸன்(ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம், 'அபூ சயீதே! உங்கள் சகோதரர் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு) யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை' என்று கூறினோம். அதற்கு ஹஸன்(ரஹ்) அவர்கள், 'அதை என்னிடம் கூறுங்கள்' என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது) வரை வந்தபோது ஹஸன்(ரஹ்) அவர்கள், 'இன்னும் சொல்லுங்கள்' என்றார்கள். அதற்கு நாங்கள் 'இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை' என்று சொன்னோம்.
அதற்கு ஹஸன்(ரஹ்) அவர்கள், 'இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக்கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில்லையா? என்று எனக்குத் தெரியவில்லை' என்றார்கள். உடனே நாங்கள், 'அபூ சயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள்!' என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன்(ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, 'அவசரக்காரனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ்(ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொஐயக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்' என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:)
பிறகு, நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று சொல்வான். 151
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7511 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சொர்க்கவாசிகளில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவரும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவரும் யாரென்றால், தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதராவார். அப்போது அவரின் இறைவன் 'சொர்க்கத்தில் நுழைந்துகொள்' என்று அவரிடம் சொல்வான். அதற்கு அவர் 'என் இறைவா! சொர்க்கம் நிரம்பிவிட்டது' என்று பதில் சொல்வார். இவ்வாறு அவரிடம் மூன்று முறை இறைவன் சொல்வான். ஒவ்வொரு முறையும் அம்மனிதர் சொர்க்கம் நிரம்பிவிட்டது என்றே அல்லாஹ்விடம் கூறுவார். பின்னர் அல்லாஹ் 'உலகத்தைப் போன்று பத்து மடங்கு இடம் (சொர்க்கத்தில்) உனக்குண்டு' என்று சொல்வான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.152
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7512 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'ஒரு நற்சொல்லைக் கொண்டாவது' என்று காணப்படுகிறது. 153
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7513அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்ற படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் 'நானே அரசன்; நானே அரசன்' என்று சொல்வான்' எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை கண்டேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி அவர்கள் மதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.154
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7514ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் '(மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?' என்று வினவியதற்கு இப்னு உமர்(ரலி) கூறினார்: உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். இறைவன் தன்னுடைய திரையை அவரின் மீது கோட்டு (அவரை மறைத்து) விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன் 'நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அவர் 'ஆம்' என்பார். இறைவன் (மறுபடியும்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அப்போதும் அவர் 'ஆம்' என்று கூறி தம் குற்றத்தை ஒப்புக் கொள்வார்.
பிறகு 'நான் (உன் குற்றங்களை) உலகில் மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்' என்று சொல்வான்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 155
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7515 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். அப்போது மூஸா(அலை) அவர்கள் 'நீங்கள் தாமே உங்கள் சந்ததிகளை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய ஆதம்?' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அல்லாஹ் தன் தூதுச் செய்திகளை அனுப்பவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூஸா நீங்கள் தாமே! அப்படிப்பட்ட நீங்களா, நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைக் குறை சொல்கின்றீர்கள்?' என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) ஆதம் (அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.156
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7516 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் '(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?' என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம் 'நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவிர்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். எனவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்டுக்கொள்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று அவர்களிடம் சொல்லி, தம் செய்ததவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அறிவித்தார்.157
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7517இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) 'இவர்களில் அவர் (முஹம்மத் - ஸல்) யார்?' என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் 'இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்' என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், 'இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்' என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158
அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு 'புராக்' வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், 'யார் அவர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் வந்திருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'என்னுடனிருப்பவர் முஹம்மத்' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) 'ஆம்' என்றார்கள். 'அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!' என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, 'அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே 'ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன நதி ஜிப்ரீலே?' என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். அப்போது அவரிடம் முதல் வானத்திலிருந்த வானவர்கள் கேட்டதைப் போன்றே (இந்த வானத்திலிருந்த) வானவர்களும், 'யார் அவர்?' என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்கள். வானவர்கள், 'உம்முடன் இருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'முஹம்மத்(ஸல்) அவர்கள்' என்று பதிலளித்தார்கள். 'அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று வானவர்கள் கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம்' என்றார்கள். அப்போது அவ்வானவர்கள், 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துகள்' என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அ(வ்வானத்திலிருந்த வான)வர்களும் முதலாவது மற்றும் இரண்டாவது வானதிலிருந்தவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அங்கிருந்த (வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஐந்தாம் வானிற்கு உயர்ந்தார்கள். அ(ங்கிருந்த வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பின்னர் நபியவர்களுடன் ஆறாம் வானிற்கு உயர்ந்தார்கள். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஏழாம் வானிற்கு உயர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த(வான)வர்களும் அவரிடம் முன்போன்றே கூறினர்.
ஒவ்வொரு வானத்திலும் இறைத்தூதர்கள் இருந்ததாகக் கூறிய நபி(ஸல்) அவர்கள் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இத்ரீஸ்(அலை) அவர்கள் இரண்டாம் வானிலும், ஹாரூன்(அலை) அவர்கள் நான்காம் வானிலும், இன்னொருவர் ஐந்தாம் வானிலும், அவரின் பெயர் நினைவில்லை - இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆறாம் வானிலும் மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்ற சிறப்பினடிப்படையில் ஏழாம் வானிலும் இருந்ததாக நான் மனனமிட்டுள்ளேன். அப்போது மூஸா(அலை) அவர்கள், 'என் இறைவா! எனக்கு மேலே வேறொருவர் உயர்த்தப்படுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை' என்று கூறினார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிபரீல் அதற்கு மேலேயும் ஏறினார். அல்லாஹ்வுக்கு மட்டுமே அதன் நிலை தெரியும். இறுதியாக (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா'விற்குச் சென்றார்கள். அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், 'நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது' என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், 'முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?' என்று கேட்டான்.
நபி(ஸல்) அவர்கள், 'நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்' என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், 'உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
'நீர் விரும்பினால் ஆகட்டும்' என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.
எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் நாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி(ஸல்) அவர்கள், 'என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது' என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியதுழூ ஐந்துக்கு வந்த போதும் மூஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, 'முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பன}இஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்' என்று கூறினார்கள்.
ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!' என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன 'முஹம்மதே!' என்று அழைத்தான். அதற்கு 'இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு' என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அல்லாஹ், '(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது 'லவ்ஹுல் மஹ்ஃபூல்' எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்' என்று சொன்னான்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது 'என்ன செய்தீர்?' என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப்போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்' என்றார்கள்.
அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பன} இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப் பெற்றேன். அப்படியிருந்தும் அதைக் கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸாவே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்றுவிட்டதனால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன்' என்றார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள், '(நபியே!) அல்லாஹ்வின் திருப்பெயரால் (பூமிக்கு) இறங்குங்கள்' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள்; மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் இருந்தார்கள்.159
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7518 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.160
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7519நபி(ஸல்) அவர்கள், தம்மிடம் கிராமவாசி ஒருவர் இருக்க, ஒரு நாள் (பின்வருமாறு) அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
சொர்க்கவாசிகளில் ஒருவர் தம் இறைவனிடம் பயிர், செய்ய அனுமதி கேட்பார். இறைவன், '(இங்கு) நீ விரும்பிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம். எனினும், நான் பயிர் செய்ய விரும்புகிறேன்' என்று பதிலளிப்பார். உடனே அவர் விரைந்து சென்று விதைகளைத் தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அது முளைத்து பயிராம் கதிர் முற்றி அறுவடை செய்யப்பட்டு மலை போன்று களத்தில் குவிக்கப்பட்டுவிடும். அப்போது அல்லாஹ், 'ஆதமின் மகனே! எடுத்துக்கொள். ஏனென்றால், எதனாலும் உன் வயிற்றை நிரப்ப முடியாது' என்று சொல்வான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிராமவாசி உடனே 'இறைத்தூதர் அவர்களே! இந்த மனிதர் குறைஷியராகவோ அன்சாரியாகவோ தாம் இருப்பார். ஏனெனில், அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்' என்றார். இதைக் கேட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.161
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7520அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான், 'அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைவைப்பதாகும்' என்று பதிலளித்தார்கள். நான், 'நிச்சயமாக அது பெரும்பாவம்தான்' என்று சொல்லிவிட்டுப் 'பின்னர் எது?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்' என்றார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்' என்று பதிலளித்தார்கள்.162
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7521அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(புனித கஅபா) ஆலயத்தின் அருகே 'ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்' அல்லது 'குறைஷியர்' இருவரும் ஸகஃபீ ஒருவரும்' ஒன்று கூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப் போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களின் உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?' என்று கேட்க, மற்றொருவர், 'நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்' என்றார். இன்னொருவர், 'நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும அவன் நிச்சயம் கேட்பான்' என்றார். அப்போதுதான் உயர்ந்தோனான அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்குகெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 41:22 வது) வசனத்தை அருளினான். 163
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக