பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

இறைவேதத்தையும் நபிவழியையும் 7345-7370

அத்தியாயம் 96, எண் 7345
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பத்ன}ல்வாதியிலுள்ள) துல்ஹுலைiஃபாவில் (இரவின் கடைசிநேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது அவர்களுக்குக் கனவு காட்டப்பட்டது. அப்போது (கனவில்) 'சுபிட்சமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்' என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. 73


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7346இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, 'அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து' (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, 'இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், 'அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை' எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான்.74


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7347அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், 'நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்' என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தம் தொடையில் தட்டிக்கொண்டே 'மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.76
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இங்கு 'இரவில் வந்தார்கள்' என்பதைக் குறிக்க 'தர(க்)க' எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு 'தாரிக்' என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் 'தாரிக்' என்று சொல்வதுண்டு. 'ஸாம்ப்' என்பது 'பிரகாசிக்கச் கூடியது' என்று பொருள்படும். 'உஸ்குப்' (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7348அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) 'பைத்துல் மித்ராஸ்' எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு 'யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; (ஈருலம்லும்) சாந்தி அடைவீர்கள்' என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதற்கு யூதர்கள், 'நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல் காசிமே!' என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்' என்றார்கள். அப்போதும் யூதர்கள் 'நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள், அபுல் காசிமே!' என்றார்கள். உடனே அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இதைத்தான் எதிர்பார்க்கிறேன்' என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போன்றே) சொன்னார்கள். பின்னர், 'பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் தம் (விலையைப்) பெறுகிறவர் அச்சொத்தை விற்றுவிடட்டும். இல்லையென்றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்றார்கள்.77


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7349அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
'மறுமை நாளில் நூஹ்(அலை) அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் (இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டீர்களா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'ஆம்; (எடுத்துரைத்துவிட்டேன்); என் இறைவா!' என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களின் சமுதாயத்தாரிடம், 'இவர் உங்களுக்கு (இறைச் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களை எச்சரிப்பவர் எவருமே வரவில்லையே?' என்று (பொய்) சொல்வார்கள். அப்போது (நூஹ்(அலை) அவர்களிடம்) அல்லாஹ், 'உங்கள் சாட்சிகள் யார்?' என்று கேட்பான். 'முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் தாம் (என் சாட்சிகள்') என்று நூஹ்(அலை) அவர்கள் கூறுவார்கள். அப்போது நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்; (நூஹ்(அலை) அவர்கள் இறைச்செய்தியை எடுத்துரைத்தார்கள் என்று) நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு 'நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியிருக்கிறோம்' எனும் (திருக்குர்ஆன் 02:143 வது) இறைவசனத்தை ஓதினார்கள். அதிலுள்ள 'வசத்தன்' எனும் சொல்லுக்கு 'நீதி செலுத்தும் சமுதாயம்' (அத்லன்) என்று விளக்கம் அளித்தார்கள்.79
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7350-7351 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பன} அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு 'ஸாஉ'கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்' என்றார்கள்.81


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7352 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7353உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(ஒரு முறை) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் உமர்(ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூ மூஸா திரும்பிச் சென்றார்கள். பின்னர் உமர்(ரலி) அவர்கள், 'நான் அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா (ரலி) அவர்களின் குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்' என்றார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் இப்படிச் செய்ததற்கு (-வராமலிருந்ததற்குக்) காரணம் என்ன?' என்று (அவர்களிடம்) கேட்க, அபூ மூஸா(ரலி) அவர்கள், '(மூன்று முறை சலாம் சொல்லியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படி தான் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது' என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், 'இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டு வாருங்கள்; இல்லையேல் உங்களின் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்' என்றார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள், 'எங்களில் (வயதில்) சிறியவர்தாம் இதற்கு சாட்சியமளிப்பார்' என்றனர். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் எழுந்துவந்து, '(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப்பட்டுள்ளது' என்றார்கள். அதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசை திருப்பிவிட்டுள்ளது' என்றார்கள்.84


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7354அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அபூ ஹுரைரா(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே' என்று நீங்கள் (குறையாகக்) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச் சாட்டு சரியா? தவறா? என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே இருந்துவந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். நான் ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை தம் மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க் கொள்கிறவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்' என்றார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி(ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.85


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7355முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் 'இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை' என்று பதிலளித்தார்கள்.87


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7356 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குதிரை (வைத்திருப்பது), மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்): ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்;
அதை இறைவழியில் (நற்காரியங்களுக்குப்) பயன்படுத்துவதற்காக, அதைப் பசுமையான 'ஒரு வெட்ட வெளியில்' அல்லது 'ஒரு தோட்டத்தில்' ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் 'பசும்புல் வெளியில்' அல்லது 'தோட்டத்தில்' மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் பாதச் சுவடுகளும் கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மையாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து ஒரு தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (அதன் உரிமையாளரான) அவருக்கு இல்லாமல் இருந்தாலும் அதுவும் அவருக்குரிய நன்மையாகவே ஆகும். ஆக, அது அந்த மனிதருக்கு (இவ்விதம்) நற்பலனைத் தேடித் தருகிறது.
இன்னொருவர், தம் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதன் பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும், (அதனால் தாங்க முடிந்த சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அது (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன், பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் காரணமாக அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆம்விடுகின்றது.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்த கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; 'அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வான்' எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (திருக்குர்ஆன் 99:7,8) வசனங்களைத் தவிர' என்று பதிலளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.91


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7357ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து 'அதிலிருந்து (தூய்மையாகிக் கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்கவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்' என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, 'இறைத்தூதர் அவர்களே! இதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'தூய்மைப்படுத்திக்கொள்' என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) 'அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்) 'அதனால் தூய்மைப்படுத்திக்கொள்' என்று பதிலளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால்) எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.92
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7358இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹுஃபைத் பின்த் அல் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சிறிது நெய், பாலாடைக் கட்டி, சில உடும்புகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (உணவு வேளையில்) உடும்புகளைக் கொண்டு வரும்படி நபி(ஸல்) அவர்கள் கூற, (அவை கொண்டு வரப்பட்டு) நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டன. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதை அருவருப்பவர்களைப் போன்று அவற்றை உண்ணாமல்விட்டுவிட்டார்கள். (நெய் மற்றும் பாலாடைக் கட்டியை மட்டும் உண்டார்கள்.) உடும்புகள் தடை செய்யப்பட்டவையாய் இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை பரிமாறப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி நபியவர்கள் சொல்லியிருக்கவுமாட்டார்கள்.93


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7359 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(பச்சை) வெள்ளைப் பூண்டையோ வெங்கத்தையோ உண்டவர், 'நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்' அல்லது 'நம்முடைய பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டு' அவர் தம் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் இப்னு வஹ்ப்(ரலி) கூறினார்:
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் உள்ள ஒரு தட்டு கொண்டுவரப்பட்டது. அவற்றில் (துர்) வாடை அடிப்பதை நபி(ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். எனவே, அவற்றைப்பற்றி விசாரித்தார்கள். அவற்றிலுள்ள கீரைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தம்முடன் இருந்த தோழர்கள் சிலருக்கு அவற்றைக் கொடுக்கும் படி கூறினார்கள். அவ்வாறே கொடுக்கும் படி கூறினார்கள். அவ்வாறே கொடுக்கும் படி கூறினார்கள். அவ்வாறே கொடுத்தார்கள். அவர்கள் அதை உண்ண விரும்பாமலிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது 'சாப்பிடுங்கள்; ஏனெனில், நீங்கள் உரையாடாதவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'காய்கறிகள் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது' என்று இடம்பெற்றுள்ளது. வேறு சில அறிவிப்புகளில் பாத்திரம் பற்றிக் கூறப்படவில்லை.94


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7360ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிப் பெண்மணி ஒருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (தம் தேவைகளில்) ஒன்றைக் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு (பிறகு வருமாறு) உத்தரவிட்டார்கள். அவர், 'நான் (திரும்பவும் வரும்போது) தங்களைக் காணாவிட்டால் என்ன செய்வது, இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'என்னைக் காணாவிட்டால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்.
ஹுமைத்(ரஹ்) அவர்கள் தங்களின் அறிவிப்பில், 'நான் திரும்பி வரும்போது தாங்கள் இறந்துவிட்டிருந்தால்' என்பதையே 'தங்களைக் காணாவிட்டால்' என்று அப்பெண்மணி குறிப்பிட்டார் என்று அதிகப்படியாக கூறினார்கள்.95


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7361ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறினார்:
முஆவியா(ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை கேட்டேன். முஆவியா(ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, 'வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப்(ரலி) அவர்கள் தாம். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7362அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். மாறாக, (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப் பெற்றதையும் உங்களுக்கு அருளப்பெற்றதையும் நம்புகிறோம்' என்று கூறினார்கள்.97


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7363அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களின் வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக் கொண்டு, அதன் மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக 'இது இறைவனிடமிருந்து வந்ததே' என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே!98
இதை உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7364 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்! (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.99
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸை அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்கள் சல்லாம் இப்னு முத்தீஉ(ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7365 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.100
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7366இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள்.101


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7367ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே அறிவித்தார்.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்' என்றார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். 'நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?' என்று நாங்கள் பேசிக் கொள்வதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
---'நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?' என்று சொல்லும்போது ஜாபிர்(ரலி) அவர்கள், 'இப்படி' என்று சைகை செய்து கை அசைத்தார்கள்.
உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, 'நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னுடைய குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்கமாட்டேன்' என்றார்கள். எனவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி(ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம். 103


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7368அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'மஃக்ரிப்' தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்' என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, 'இது விரும்புவோருக்குத் தான்' என்றார்கள்.104


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7369ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.
அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. தம் குடும்பத்தாரை (-என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ 'அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப் பெண்ணிடம் (-பரீராவிடம்) 'நீ சந்தேகப்படும் படி எதையேனும் கண்டாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா 'குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கி விடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை' என்று கூறினார்.
உடனே நபி(ஸல்) அவர்கள் (பள்ளி வசாலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, 'முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவிபுரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நல்லதையே அறிவேன்' என்றார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.106


பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7370ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'என் வீட்டாரை இகழ்ந்து பேசுகிற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்தில்லை' என்றார்கள்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா(ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தாய்வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவ்வாறே நப(ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பி வைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், 'இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக