பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்' என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபலகுஸ் ஸுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபாலிகுல் இஸ்பாஹ்' (என்பதிலுள்ள 'இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6984என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.4
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6985என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6986என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6987என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.5
என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6988என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6989என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6990அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6991இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) சிலருக்கு 'லைலத்துல் கத்ர்' (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாள்களில் தேடிக் கொள்ளுங்கள்' என்றார்கள்.6
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6992என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.7
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6993'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.8' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
'நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.9
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6994என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.10 மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6995என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தம் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.
என அபூ கத்தத்தா(ரலி) அறிவித்தார்.11
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6996என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார்.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6997என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6998என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி (மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்' என்றார்கள்.14
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6999என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள் வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான தலை முடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. 'இரண்டு மனிதர்களின் மீது' அல்லது 'இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது' சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். அப்போது நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, '(இவர் தாம்) மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)' என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக் கண்ட குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனுடைய கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. அப்போது நான், 'யார் இவர்?' என்று கேட்டேன். அதற்கு 'இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்' என்று பதிலளிக்கப்பட்டது.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.15
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7000இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது...' என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவித்தார்.16
இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஓர் அறிவிப்பில், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அல்லது அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது.
மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7001அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அரும்லுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7002தொடர்ந்து உம்மு ஹராம்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் 'மன்னர்களாக' அல்லது 'மன்னர்களைப் போன்று' இருந்தார்கள்' என்று கூறினார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். அப்போது எனக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், 'ஏன் சிரிக்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் புனிதப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்' என்று முன்புபோன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.18
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7003இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
(நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்களுக்காக (அவர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதை முடிவு செய்ய) அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அப்போது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். (அதன்படி) அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும் போனார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது நான் உஸ்மான் அவர்களை நோக்கி), 'சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும். அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்' என்று கூறினேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் இறந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது' என்றார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை.20
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7004மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸில் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.
'மேலும் இவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்முல் அலா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(இதைக்கேட்ட) நான் மிகவும் கவலைப்பட்டவாறே உறங்கிவிட்டேன். அப்போது (கனவில்) உஸ்மான் அவர்களுக்காக ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கக் கண்டேன். எனவே இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, 'அது அவரின் நற்செயல்' என்று (விளக்கம்) கூறினார்கள்.21
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7005என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது.
இதை நபித்தோழர்களில் ஒருவரும் நபி(ஸல்) அவர்களின் குதிரைப் படை வீரர்களில் ஒருவருமான அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.22
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7006இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்து பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில் அது என்னுடைய நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் இப்னு அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்' என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், 'அறிவு' என்று பதிலளித்தார்கள்.24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக