பக்கங்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஓரிறைக் கோட்பாடு 7371-7396

ஓரிறைக் கோட்பாடு


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தார்கள்.2


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், 'நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்' என்றார்கள்.3


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்' என்று பதிலளித்தார்கள்.4


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7374அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒருவர், 'குல் ஹுவல்லாஹு அஹத்' ('நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே') எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது' என்றார்கள்.5
இதே ஹதீஸ் கத்தாதா இப்னு நுஅமான்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.6


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7375ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், 'ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்' என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்' என்று கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7376 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.7


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7377உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களின் புதல்வியரில் ஒருவரின் (ஸைனப்(ரலி) அவர்களின்) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீ ஸைனபிடம் சென்று, 'அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியது தான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச் சொல்' என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், அவர்களின் புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் அக்குழநதை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன. அப்போது ஸஅத்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் உள்ளங்களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்' என்றார்கள்.8


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7378 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.9


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7379 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.10


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7380மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)' என்றார்கள்.11


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7381அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது, 'அஸ்ஸலாமு அலல்லாஹ்' (அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (அத்திஹிய்யாத் அமர்வில்) சொல்லிவந்தோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே சாந்தி அளிப்பவன் (அஸ்ஸலாம்). (எனவே, இப்படிச் சொல்லாதீர்கள்.) மாறாக, '(சொல், செயல், பொருள் சார்ந்த) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் அவனுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய சுபிட்சமும் ஏற்படட்டும். எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அனைவர்) மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்' எனக் கூறுங்கள் என்றார்கள்.12


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7382 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. 14


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7383இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7384 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்கும்; இறுதியில் அம்லங்களின் அதிபதி (யான அல்லாஹ்,) நரகத்தில் தன்னுடைய பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக் கொள்ளும் பிறகு, 'போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!' என்று கூறும். சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மூன்று வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 19


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7385இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.
ஸாபித் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்:
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, 'நீ உண்மை; உன் சொல் உண்மை' என்றார்கள்.20


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7386அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லிவந்தோம். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்' என்றார்கள். பிறகு நான் என் மனத்திற்குள் 'லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலம்டவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'அப்துல்லாஹ் இப்னு கையேஸ! 'லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்' என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, 'சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்' என்றோ, 'அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?' என்றோ சொன்னார்கள்.22


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7387-7388அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கிறாய்!' என்று கூறுங்கள் என்றார்கள்.23


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7389 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, '(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவிமடுத்தான்' என்றார்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.24


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7390ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் 'இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' அல்லது 'என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!' என்று பிரார்த்திக்கட்டும்.25


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7391அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் 'இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!' என்பதாகவே இருந்தது. 26


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7392இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது - நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'அஹ்ஸா' எனும் சொல்லுக்கு 'மனனமிடல்' என்று பொருள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7393 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.28


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7394ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.29


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7395அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது 'பிஸ்மிக்க நமூத்து வ நஹ்யா' (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) விழித்தெழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.30


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7396 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, 'பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா' (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.31


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக