பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

கனவுக்கு விளக்கமளித்தல் 7007-7033


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7007இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்து காலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் இப்னு அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்' என்று கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், 'அறிவு' என்று பதிலளித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7008அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை), 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டக் கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் இப்னு அல்கத்தாப் (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவிற்கு (முழுநீளச்) சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்துசென்றார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், '(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், '(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்' என்று விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.25


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7009அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின் மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின் மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் இப்னு அல்கத்தாப்(தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்' என்றார்கள். மக்கள், '(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், '(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும் குறிக்கும்' என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7010கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் (மதீனா பள்ளிவாசலில்) ஓர் அவையில் அமர்ந்திருந்தேன். அதில் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் இப்னு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். (அன்னாரைக் கண்ட) மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்' என்று கூறினர். இதைக் கேட்ட நான் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களிடம் '(தங்களைக் குறித்து) மக்கள் இப்படி இப்படிக் கூறினர்' என்று சொன்னேன்.
(அதற்கு) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் கூறுவது முறையல்ல. (மக்கள் இவ்வாறு பேசிக் கொள்வதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவுதான். (அதில்) பசுமையான பூங்கா ஒன்றில் தூண் நடப்பட்டு இருந்தது. அத்தூணின் மேற்பகுதியில் பிடியொன்று காணப்பட்டது. அதன் கீழ் பகுதியில் சிறிய பணியாள் ஒருவர் இருந்தார். அப்போது (என்னிடம்) 'இதில் ஏறுங்கள்' என்று சொல்லப்பட்டது. உடனே நான் (அதில்) ஏறி அந்தப் பிடிப்பை பற்றினேன். பிறகு நான் இக்கனவு குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் விவரித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ்(பின் சலாம்), (இறை நம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இறப்பார்' என்றார்கள். 26


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.27


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7012ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான்அவரிடம், '(அந்தத் துணியை) விலக்குங்கள்' என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்து கொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் '(இத்துணியை) நீக்குங்கள்' என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன். 28


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7013என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 30
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: 'ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள்' (ஜவாமிஉல் கலிம்) என்பதற்கு விளக்கமாவது: நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் ஏடுகளில் (நீளமான வார்த்தைகளால்) எழுதப்பட்டு வந்த பெரும் பெரும் கருத்துக்களை(யும் தத்துவங்களையும்) ஓரிரு வார்த்தைகளில் ஒருங்கிணைத்து (இரத்தினச் சுருக்கமாக)ப் பேசுகிற ஆற்றலை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் - என எனக்குச் செய்தி எட்டியது.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7014அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அறிவித்தார்.
நான் பூங்காவொன்றில் இருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அந்தப் பூங்காவின் நடுவே (இரும்புத்) தூண் இருந்தது. அந்தத் தூணின் மேற்பகுதியில் பிடி ஒன்றும் இருந்தது. அப்போது என்னிடம் 'இதில் ஏறுங்கள்' என்று சொல்லப்பட்டது. நான் 'என்னால் இயலாதே' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள். ஒருவர் வந்து என் ஆடையை (பின்னாலிருந்து) உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறி (அதன் மேற்பகுதியிலிருந்த) பிடியைப் பலமாகப் பற்றிக் கொண்டேன். நான் அதைப் பற்றிய நிலையில் இருக்கும்போதே (உறக்கத்திலிருந்து) விழித்துவிட்டேன். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்து நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாம் எனும் பூங்காவாகும். அந்த தூண் இஸ்லாம் என்னும் (பலமான) தூணாகும். அந்தப் பிடி (இறை நம்பிக்கையெனும்) பலமான பிடியாகும். (ஆக,) நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்தைப் பலமாகப் பற்றியவராகவே இருப்பீர்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் (அந்தக் கனவிற்கான விளக்கத்தைக்) கூறினார்கள். 31
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7015இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவில், என்னுடைய கையில் ஒரு பட்டுத் துணி இருப்பதைப் போன்றும், அதை நான் சொர்க்கத்தில் ஓரிடத்தில் எறியும்போதெல்லாம் அது என்னை அந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு பறந்ததைப் போன்றும் பார்த்தேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸாவிடம் எடுத்துரைத்தேன்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7016அது குறித்து ஹஃப்ஸா, நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தபோது நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரர் நல்ல மனிதர்' அல்லது 'அப்துல்லாஹ் நல்ல மனிதர்' என்று கூறினார்கள். 33

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7017என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.35
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்கவேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும்.
தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டுவந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் சிலர் (இப்னு சீரீன் அறிவித்த) மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் ஹதீஸுடன் சேர்த்துவிட்டுள்ளனர். ஆனாலும், அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (இங்கு ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள) அறிவிப்பே தெளிவானதாகும்.
யூனுஸ் இப்னு உபைத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கால்) விலங்கு குறித்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் கூறியது என்றே கருதுகிறேன்.
அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:
கழுத்தில் பூட்டப்படும் விலங்குகளுக்கே 'அஃக்லால்' எனப்படும்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7018இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் அளித்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
(நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்கள் (யார் எவருடைய வீட்டில் தங்குவ(என்பதை முடிவு செய்வ)தற்காக அன்சாரிகள் சீட்டுக்குலுக்கிப் போட்டபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அப்பால் அவர் நோய்வாய்ப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளித்தோம். இறுதியில் அவர் இறந்தார். பிறகு நாங்கள் அவரை (நீராட்டி) அவரின் ஆடையிலேயே கஃபனிட்டோம். இந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், (உஸ்மானை நோக்கி) 'சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும்; அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்' என்று சொன்னேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், '(அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது) உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (இது பற்றி) எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(உஸ்மான் இப்னு மழ்வூன்) இறந்துவிட்டார். அல்லாஹ்விடமிருந்து அவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராயிருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பதோ, உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதோ எனக்கே தெரியாது' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூறுவதேயில்லை.
பிறகு உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்குரிய நீருற்று ஒன்று ஒடுவதை நான் (கனவில்) கண்டேன். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் 'அது (வாழ்நாளில் அவர் புரிந்த) நற்செயல். அது (இன்று) அவருக்காக(ப் பெருக்கெடுத்து) ஓடுகிறது' என்றார்கள். 37


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7019என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். (நான் நீர் இறைத்து முடித்த பின்) அபூ பக்ர் அவர்கள் வாளியை எடுத்து 'ஒரு வாளி நீரை' அல்லது 'இரண்டு வாளிகள் நீரை' இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அபூ பக்ர் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.39


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7020அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் (ஆட்சிக் காலம்) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கண்ட கனவு குறித்து அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒரு கிணற்றைச் சுற்றி) மக்கள் திரள்வதை நான் (கனவில்) கண்டேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் எழுந்து 'ஒரு வாளி நீரை' அல்லது 'இரண்டு வாளிகள் நீரை' இறைத்தார்கள். அவர் இறைத்தபோது சற்று சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு அளிப்பானாக! பிறகு உமர் இப்னு அல்கத்தாப் எழுந்தார். (அந்த வாளியை அபூ பக்ர் அவர்களின் கையிலிருந்து எடுத்துக்கொண்டார். அவரின் கையில்) அது பெரியதொரு வாளியாக மாறியது. மனிதர்களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய (அபூ ர்வத் தலைவர்) ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7021என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபா அவர்களின் புதல்வர் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக்கொண்டு அந்தக் கிணற்றிலிருந்து 'ஒரு வாளி நீரை' அல்லது 'இரண்டு வாளிகள் நீரை' இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அது மிகப்பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் புதல்வர் உமர் எடுத்துக்கொண்டார் உமர் இறைத்ததைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.40


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7022என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் இருந்து கொண்டு மக்களுக்கு நான் நீர் புகட்டிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தார்.41 அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூ பக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) எடுத்துக்கொண்டு மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும் வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். அப்போதும் தடாகத்தில் நீர் பொங்கிக் கொண்டிருந்தது.
என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7023அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு ஓர் அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்துகொண்டிருந்தாள். நான், (வானவர்களிடம்) 'இந்த அரண்மனை யாருக்குரியது?' என்றேன். அதற்கவர்கள், 'உமருக்குரியது' என்றார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்' என்றார்கள்.
இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்!' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7026என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஒருநாள்) நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) நான் கஅபாவைச் சுற்றிவந்து கொண்டிருக்கக் கண்டேன். அப்போது மாநிறமான தலைமுடி படிந்து தொங்கிக் கொண்டிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க இரண்டு மனிதர்களுக்கிடையே (சாய்ந்தவராக கஅபாவைச் சுற்றிக்கொண்டு) இருந்தார். அப்போது நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். 'மர்யமின் மகன் (ஈசா)' என பதிலளித்தனர். பிறகு நான் திரும்பிப் பார்த்த படியே சென்றபோது, அங்கு சிவப்பான, உடல் பருமனான, சுருட்டைத் தலை முடியுள்ள வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், 'இவன் யார்?' என்று கேட்டேன். 'இவன்தான் தஜ்ஜால்' என்று பதிலளித்தனர். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு மிகவும் ஒப்பானவன் இப்னு கத்தன்தான். இப்னு கத்தன் குஸாஆ குலத்தின் பனுல் முஸ்தலிக் குடும்பத்திலுள்ள ஒரு மனிதன் ஆவான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 46


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7027என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) பால்கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்த அது (என் நகத்தின் ஊடே வெளியேறி) ஓடக் கண்டேன். பிறகு மீதியை உமருக்குக் கொடுத்தேன்.
(அப்போது) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், 'அறிவு' என்று பதிலளித்தார்கள். 47


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7028இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே 'உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்' என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு (நாள்) இரவு நான் உறங்கப்போனபோது, 'அல்லாஹ்வே! என் விஷயத்தில் நீ ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் எனக்கும் கனவைக் காட்டு' என்று பிரார்த்தித்தேன். நான் அவ்வாறே (உறக்கத்தில்) இருந்தபோது (கனவில்) இரண்டு வானவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் முனை வளைந்த இரும்புத் தடி ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அவர்கள் இருவரிடையே இருந்து கொண்டு அல்லாஹ்விடம், 'அல்லாஹ்வே! நரகத்தைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.
பிறகு தம் கையில் இரும்புத் தடி இருக்க இன்னொரு வானவர் என்னைச் சந்திக்கக் கண்டேன். அவர் (என்னிடம்) 'இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்; நீங்கள் அதிகமாகத் தொழுதால் நீங்கள் நல்ல மனிதர் தாம்' என்றார். அப்போது அந்த வானவர்கள் (இருவரும்) என்னை நரகத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தினர். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கிணற்றின் இரண்டு பக்கவாட்டிலுமுள்ள கல் தூண்களைப் போன்று தூண்கள் அதற்கும் இருந்தன. ஒவ்வோர் இரண்டு தூண்களுக்கும் இடையே ஒரு வானவர் இருந்தார். அவரின் கையில் முனை வளைந்த ஓர் இரும்புத் தடி இருந்தது. அந்த நரகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த பல மனிதர்களை கண்டேன். அதில் (எனக்கு அறிமுகமான) குறைஷியர் சிலரை நான் கண்டுகொண்டேன். பிறகு அவ்வானவர்கள் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப்பக்கத்தில் என்னைக் கொண்டுசென்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7029(தொடர்ந்து) இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் உறங்கி எழுந்ததும்) இதை (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். ஹஃப்ஸா(ரலி) அவர்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் நல்ல மனிதர்தாம் (இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால்)' என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதைக்கேட்ட பின் இப்னு உமர்(ரலி) அவர்கள் (இரவில்) அதிகமாகத் தொழுது கொண்டேயிருந்தார்கள்.49


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7030இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நான் மணமாகாத இளைஞனாக இருந்தேன். அப்போது நான் பள்ளிவாசலில் தான் இரவில் தங்குவேன். (நபித்தோழர்களில்) யாரேனும் கனவு கண்டால் (காலையில்) அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். (ஒரு நாள்) நான், 'அல்லாஹ்வே! உன்னிடம் எனக்கு நன்மை ஏதேனும் இருக்குமானால் எனக்கு ஒரு கனவைக் காட்டுவாயாக! அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு விளக்கம் கூறவேண்டும்' என்று பிரார்த்தித்துவிட்டு உறங்கினேன். அப்போது (கனவில்) என்னிடம் இருவானவர்கள் வந்து அவர்களிருவரும் என்னை அழைத்துக்கொண்டு போவதைக் கண்டேன். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் சந்தித்தார். அப்போது அவர் என்னிடம், 'இனி எப்போதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள். நீங்கள் நல்ல மனிதர்' என்றார். பிறகு அவர்கள் இருவரும் என்னை நரகத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். கிணற்றின் சுற்றுச்சுவர் போன்று அதற்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டடிருந்தது. அப்போது அதில் மனிதர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரும் இருந்தார்கள். பிறகு அவர்கள் இருவரும் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப் பக்கத்திற்கு என்னைக் கொண்டு போனார்கள். விடிந்ததும் அதை நான் (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சொன்னேன்.


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7031ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் அதை விவரித்தபோது அவர்கள், 'அப்துல்லாஹ் (இப்னு உமர்) நல்ல மனிதர் தாம்; இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)' என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கேட்ட பின் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் இரவில் அதிகமாகத் தொழக்கூடியவராயிருந்தார்கள்.50


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7032அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'அறிவு' என்று பதிலளித்தார்கள். 52


பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7033உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக