பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

நீதியும் நிர்வாகமும் 7162-7187


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7162 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுதவிரும்பியபோது மக்கள், 'ரோமர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை மட்டுமே படிப்பார்கள்' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்னும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (இறைத்தூதர் முஹம்மத்) என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.26


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7163அப்துல்லாஹ் இப்னு சஅதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'ஆம்' என்றேன். உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்க, நான், 'என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். எனவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன்' என்று பதிலளித்தேன். உமர்(ரலி) கூறினார்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், 'என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்' என்று சொல்லிவந்தேன். இறுதியில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், 'என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) இதை வழங்குங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இச்செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்தோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7164 உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், 'என்னை விட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்' என்று சொல்வேன். ஒரு முறை எனக்கு (நன்கொடைப்) பெருநாள் ஒன்றை அவர்கள் வழங்கியபோது, நான், 'என்னை விட அதிகமாக இது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) நீங்கள் இதை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு (உங்களுக்குத் தேவைப்படாவிட்டால்) தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்பட்டு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இச்செல்வத்திலிருந்து உங்களுக்கு (தானாக) வரும் எதுவாயினும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதன் பின்னே நீங்களாகச் செல்லாதீர்கள்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7165ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7166 பன} சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்று விடலாமா? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்டார். பிறகு (இறைகட்டளைக்கேற்பக் கணவன், மனைவி) இருவரும் பள்ளிவாசலிலேயே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். அப்போது நானும் அங்கிருந்தேன்.28


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7167அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களை அழைத்து, இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பினார்கள். (இவ்வாறு) அவர் தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் அளித்தபோது, 'உனக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரை (பள்ளிவாசலில் இருந்து வெளியே) கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்' என்றார்கள்.29


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7168ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாவேன்.30
கல்லெறி தண்டனை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7169 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தம் ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரின் சகோதரரின் உரிமையில் சிறிதை (உண்மை நிலை அறியாமல் வாதங்களை வைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்.
என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.31


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7170அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(போரில் எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை' என்று கூறினார்கள். உடனே நான் (என்னால்) கொல்லப்பட்டவரை நானே கொன்றேன் என்பதற்கு ஆதாரம் தேடுவதற்காக எழுந்தேன். எனக்காக சாட்சியம் சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. எனவே, நான் உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (போரில் எதிரி ஒருவனைக்) கொன்றதைச் சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், '(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கிற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடம் இருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள்' என்றார்.
அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தைவிட்டுவிட்டு, குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்' என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்கு பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.33
மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.34
ஹிஜாஸ் அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி தாம் அறிந்ததை (மட்டும்) வைத்துத் தீர்ப்பளிக்கலாகாது. அவர் தம் பதவிக்காலத்தில் அதற்கு சாட்சியாக இருந்தாலும் சரி! அதற்கு முன்பே சாட்சியாக இருந்தாலும் சரி! (அவரின் மீது களங்கம் கற்பிக்க இடமுண்டு என்பதே இதற்குக் காரணம்.) நீதிமன்றத்தில் பிரதிவாதி ஆஜராம் மற்றவரின் உரிமை குறித்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தாலும், இரண்டு சாட்சிகளை அழைத்து அவரின் வாக்குமூலத்தின்போது ஆஜர்படுத்தாத வரை அவருக்கெதிராகத் தீர்ப்பளிக்கலாகாது என அந்த அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இராக்வாசிகளில் சிலர் கூறுகின்றனர்: நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட, அல்லது பார்த்த ஒன்றை (ஆதாரமாக) வைத்து அவர் தீர்ப்பளிக்கலாம். நீதிமன்றமல்லா மற்ற இடங்களில் (தாம் கேட்ட அல்லது பார்த்த) ஒன்றை வைத்து அவர் தீர்ப்பளிக்கலாகாது; பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும்போது இரண்டு சாட்சிகளை ஆஜர்படுத்தினால் தவிர.
இராக்வாசிகளில் இன்னும் சிலர், 'அல்ல! (வாதியின் வாக்குமூலத்தை வைத்தே) நீதிபதி தீர்ப்பளிக்கலாம். ஏனெனில், அவர் (நீதிபதி) நம்புதற்குரிய ஒருவராவார்; சாட்சியத்தால் நோக்கமே உண்மையை அறிவதுதான். நீதிபதி தீர்ப்பளிப்பார்; மற்ற பிரசினைகளில் (அவ்வாறு தாம் அறிந்ததை வைத்து, சாட்சிகள் இல்லாமல்) தீர்ப்பளிக்க மாட்டார்' என்று கூறுகின்றனர்.
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வேறு யாரும் அறியாத, தாம் (மட்டும்) அறிந்திருக்கும் ஒன்றை வைத்துத் தீர்ப்பளிப்பது நீதிபதிக்கு முறையாகாது. பிறரின் சாட்சியத்தைவிட அவர் அறிந்திருப்பது பலமானதாக இருக்கலாம். ஆனாலும், இதன் மூலம் முஸ்லிம்களிடையே தம்மை அவர் தவறான எண்ணத்திற்கு உட்படுத்திக் கொள்வதும், முஸ்லிம்களைச் சந்தேகத்தில் ஆட்படுத்துவதும் நேரலாம். நபி(ஸல்) அவர்கள், பிறர் சந்தேகப்படும் வகையில் நடப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால்தான், (தம்மைப் பள்ளிவாசலில் சந்தித்துவிட்டுச் சென்ற தம் துணைவியாரை இருவர் பார்த்தபோது) 'இவர் ஸஃபிய்யா தாம் (வேறு யாருமல்லர்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.35


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7171அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் (சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, '(இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம்' என்றார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்களின் மீதூ சந்தேகப்படுவோம்)' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்' என்றார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.36


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7172அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்' என்றார்கள். அப்போது நான், 'எங்கள் (யமன்) நாட்டில் 'பித்உ' எனும் (மது) பானம் (தேனில்) தயாரிக்கப்படுகிறதே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்றார்கள்.37
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7173 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (விருந்துக்கு) அழைப்பவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.38


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7174 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பன}ஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, 'இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், 'நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, 'இது உமக்குரியது; இது எனக்குரியது' என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்' என்றார்கள். பிறகு, அவர்களின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, 'நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று மும்முறை கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:
இதை நான் என் கண்ணால் கண்டேன்; காதால் கேட்டேன். (சந்தேகமிருப்பின்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருடன் என்னுடன் இதைக் கேட்டார்.39


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7175இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் 'குபா' பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர்.40


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7176-7177 மர்வான் இப்னு ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு உக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர்களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்தபோது, 'உங்களில் யார் போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களின் முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்' என்று கூறினார்கள்.
உடனே மக்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்களிடம் அவர்களின் சமூகத் தலைவர்களை பேசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.41-ஹ


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7178முஹம்மத் இப்னு ஸைத் இப்னி அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்' என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள், 'இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவதை (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்' என்று பதிலளித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7179 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.42


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7180ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒருவர். நான் (செலவுக்காக) அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்' என்றார்கள்.44


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7181 நபி(ஸல்) அவர்கள் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்து கொள்வதைக் கேட்டார்கள். எனவே, வெளியேவந்து அவர்களிடம் சென்று, 'நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரின் அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். எனவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறனோ (அவர் அதைப் பெறவேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதைநினைவில் கொண்டு விரும்பினால், அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; அல்லதுவிட்டுவிடட்டும்' என்று கூறினார்கள்.45


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7182ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உத்பான இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், 'ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக் கொள்' என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக் கொண்டு '(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்' என்றார்கள். அப்போது அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, '(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்' என்று கூறினார். எனவே, இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றர். ஸஅத்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (இவன்) விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்' என்று கூற, அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், '(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரின் ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்' என்றார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்' என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு 'தாந் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புத்தான் உரியது' என்றார்கள்.
பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா(ரலி) அவர்களிடம், 'இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்' என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா(ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.46


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7183 'ஒரு சொத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறர்களுக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.47' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7184மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) அவர்கள் (அங்கு) வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: இந்த இறைவசனம் என் விஷயத்திலும் ஒரு கிணறு தொடர்பாக நான் வழக்கு தொடுத்திருந்த ஒருவர் விஷயத்திலும் தான் இறங்கிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் ஆதாரம் எதுவும் இருக்கிறதா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான் 'இல்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டியதுதான்' என்று சொல்ல, நான் 'அவர் (தயங்காமல்) சத்தியம் செய்துவிடுவார்' என்று சொன்னேன். அப்போதுதான் இந்த (திருக்குர்ஆன் 03:77 வது) வசனம் அருளப்பெற்றது.48


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7185உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் (அறையின்) வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, 'நான் மனிதன் தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். இப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுர்யமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதன் காரணத்தால் அவர் உண்மையே சொல்வதாக எண்ணி நான் அவருக்குத் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (உண்மை தெரியாமல் வாதப்பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்தால் அது நரக நெருப்பின் துண்டேயாகும். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; (இல்லையேல்) அதைவிட்டு விடட்டும்.50


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7186ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தம் தோழர்களில் ஒருவர் 'என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்' என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை.
எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.52


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7187இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். அப்போது உசாமாவின் தலைமை குறித்து (அவர் வயதில் சிறியவர் என்று) குறை கூறப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவரின் தலைமை குறித்து இப்போது நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், (இது என்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும் தான். நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைக்குத் தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். அவருக்குப் பின் (அவரின் புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராவார்' என்றார்கள்.53


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக