பக்கங்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஓரிறைக் கோட்பாடு 7447-7471

ஓரிறைக் கோட்பாடு


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7447அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆம்ராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள 'முள்ர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று கூறிவிட்டு, 'இது எந்த மாதம்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்' என்றோம். அப்போது அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, 'இது துல்ஹஜ் மாதம் அல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'ஆம்' என்றோம். 'இது எந்த நரகம்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்' என்றோம். அப்போது அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, 'இது (புனித) நகரமல்லவா?' எனக் கேட்க, நாங்கள், 'ஆம்' என்று பதிலளித்தோம். 'இது எந்த நாள்?' என்று அவர்கள் கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்' என்று சொன்னோம். அப்போதும் அவர்கள், அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?' எனக் கேட்டார்கள். நாங்கள், 'ஆம்' என்றோம்.
(பிறகு,) 'உங்களின் புனிதமிக்க இந்நகரத்தில் உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்' என்று கூறினார்கள்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, 'நபி(ஸல்) அவர்கள் உண்மை சொன்னார்கள்' என்று கூறுவார்கள்.
பிறகு, நபி(ஸல்) அவர்கள் 'நான் (உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? என்று (இரண்டு முறை) கேட்டார்கள்.87


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7448உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தறுவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக் நன்மையை எதிர்பார்ப்பீராக' என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது.
அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன்.
(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள்.88


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7449 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சொர்க்கமும் நரகமும் தம் இறைவனிடம் வாக்குவாதம் செய்தன. அப்போது சொர்க்கம், 'என் இறைவா! எனக்கென்ன ஆயிற்று? மக்களில் பலவீனர்களும் சாமானியர்களும் தானே எனக்குள் நுழைகிறார்கள்!' என்று கேட்டது. நரகம் 'நான் தற்பெருமைக்காரர்களுக்கு மட்டுமே உரியவனாம் விட்டேனே!' என்று முறையிட்டது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்ன கருணை(யின் பரிசு) ஆவாய்' என்று சொன்னான். நரகத்திடம் நீ நான் அளிக்கும் வேதனை ஆவாய். நான் விரும்புகிறவர்களை உன் மூலம் தண்டிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு -இரண்டையும் நோக்கி - 'உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்' என்று கூறுவான்.
மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாரும் அநீதி இழைப்பதில்லை. அவன், தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைக்கிறான். நரகத்தில் அவர்கள் போடப்படும்போது, 'இன்னும் இருக்கிறதா?' என அது மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தன்னுடைய பாதத்தை வைக்க, அது நிரம்பிவிடும்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும்; போதும்; போதும் என அது கூறும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.89


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7450 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரக நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக் கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு 'ஜஹன்னமிய்யூன்' (நரக விடுதலைபெற்றோர்) என்று சொல்லப்படும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.90


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7451அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! மறுமைநாளில் அல்லாஹ் வானத்தை ஒரு விரலிலும் பூமியை ஒரு விரலிலும் மலைகளை ஒரு விரலிலும் மரத்தை ஒரு விரலிலும் நதிகளை ஒரு விரலிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரலிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தன்னுடைய கரத்தால் (சைகை செய்தவாறு) 'நானே அரசன்' எனக் கூறுவான்' என்றார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, 'அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) வசனத்தைக் கூறினார்கள்.91


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7452இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் (என் சிறியது தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்தில், இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒரு நாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தூங்கிவிட்டார்கள். 'இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது' அல்லது அதன் 'ஒரு பகுதி வந்தபோது' அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு 'நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன' எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பிறகு எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள்.92


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7453 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்தின் (அர்ஷின்) மேலே 'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று தன்னிடம் எழுதி வைத்துக் கொண்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.93


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7454உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது 'பகல்' அல்லது 'இரவு' சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவரும் நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனுடைய வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்செயல்களைப் புரிந்துகொண்டே செல்வார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலைப் புரிந்து கொண்டே செல்வார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளி தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்) செயல்களைச் செய்து அதன் விளைவாக சொர்க்கம் புகுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.94


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7455இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), 'ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?' என்று கேட்டார்கள். அப்போதுதான், (நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னருப்பவையும், பின்னிருப்பவையும் இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமானவையே! (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்' எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதுவே முஹம்மது(ஸல்) அவர்களு(டைய கேள்வி)க்கு பதிலாக அமைந்தது. 95


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7456அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) 'இவரிடம் 'உயிர்' (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!' என்றார். இன்னொருவர், 'இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)' என்றார்.
பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் 'ரூஹ்' பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், '(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் 'அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!' என்றார்கள்.96


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7457 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.
என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.97


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7458அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்' என்று பதிலளித்தார்கள்.98


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7459 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும் வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்களின் மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.
என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.99


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7460 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் கட்டளையை நிலை நிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்து கொண்டேயிருப்பர். அவர்களை நம் மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமைநாள்) வந்துவிடும்.
இதை முஆவியா(ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் இப்னு யுகாமிர்(ரஹ்) அவர்கள், 'முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், 'இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூற, முஆவியா(ரலி) அவர்கள் 'இதோ, இந்த மாலிக் 'இந்தக் குழுவனிர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்' என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்' என்றார்கள். 100


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7461இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புடைசூழ (தன்னை நபி என வாதிட்ட மகா பொய்யன்) முசைலிமாவுக்கு அருகே நின்றார்கள். அப்போது (தலைமைப் பதவியை உங்களுக்குப் பின் எனக்குத் தர வேண்டும் என அவன் கேட்டான். அதற்கு) நபி(ஸல்) அவர்கள் 'நீ இந்தப் பேரீச்ச மட்டையின் துண்டை என்னிடம் கேட்டாலும் நான் அதை உனக்குத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் விதித்துள்ள கட்டளையை உன்னால் தாண்டிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்' என்றார்கள்.101


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7462அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியபடி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் 'அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்' என்றார். அதற்கு மற்றவர் 'அவரிடம் கேட்காதீர்கள். இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்து விடக் கூடும்' என்று சொல்ல, மற்றவர்கள் 'நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து வந்து) 'அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?' என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அவருக்க பதில் எதுவும் சொல்லாமல்) மெளனமாக இருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்து கொண்டேன். '(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தை எடுத்துரைத்தார்கள்.102
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) கூறினார்: ('உங்களுக்கு' சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக) 'அவர்களுக்கு' என்றே எங்களின் ஓதலில் உள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7463 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே தம் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் அடைந்து கொண்ட நன்மையுடன் அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.103


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7464 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை புரியும்போது வலியுறுத்திக் கேளுங்கள். நீ விரும்பினால் எனக்குக் கொடு என்று கேட்காதீர்கள். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அல்லாஹ்வை நிர்பந்திப்பவர் எவருமில்லை.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.106


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7465அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் 'நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்' என்று சொன்னேன்.
நான் இவ்வாறு சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். திரும்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையில் தட்டிக் கொண்டே 'மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.107


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7466 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் இறைநம்பிக்கையாளர்களின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறைநம்பிக்கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப்படுகிறார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனி நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும்போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.108


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7467அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். 'தவ்ராத்' வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் 'நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு 'கீராத்' வழங்கப்பெற்றது. பின்னர் 'இன்ஜீல்' வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு 'கீராத்' வழங்கப்பெற்றது. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன. (அப்போது) 'தவ்ராத்' வேதக்காரர்கள் 'எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!' என்றார்கள். அல்லாஹ், 'நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?' என்று கேட்க, அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் 'அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்' என்று சொன்னான். 109


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7468உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் ஒரு குழுவினரோடு உறுதி மொழியளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்: நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; நீங்கள் திருடக் கூடாது; நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; நீங்கள் எவரின் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது; நல்ல காரியத்தில் நீங்கள் எனக்கு மாறுசெய்யக் கூடாது. உங்களில் இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இம்மையிலேயே தண்டிக்கப்பட்டால், அது அவருக்குப் பரிகாரமும் (அவரைத்) தூய்மைப்படுத்தக் கூடியதும் ஆகும். அல்லாஹ் எவருடைய குற்றத்தை மறைத்து விடுகிறானோ அவரின் விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன் நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப்பான். 110


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7469அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) 'இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவுகொள்ளச் செல்வேன். ஒவ்வொரு துணைவியாரும் கர்ப்பமுற்று இறைவழியில் போரிடுகிற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்' என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனiவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களின் துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, இறைவழியில் போரிடும் குதிரைவீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்.111


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7470இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) கிராமவாசி ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். 'கவலைப்படாதீர்கள்! (உம்முடைய நோய்) அல்லாஹ் நாடினால் (உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தும்' என்றார்கள். அந்தக் கிராமவாசி 'தூய்மைப்படுத்துமா? (இல்லை.) மாறாக, வயதான கிழவனைப் பீடிக்கிற கொதிக்கும் காய்ச்சல் ஆகும். அந்தக் காய்ச்சல் இவனை மண்ணறைகளைச் சந்திக்க வைத்துவிடும்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் சரி (அவ்வாறே ஆகும்)' என்றார்கள்.112


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7471அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நாங்கள் தொழுகையைவிட்டு உறங்கிவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ், தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றி, தான் நாடியபோது அவற்றைத் திருப்பி அனுப்புகிறான்' என்றார்கள். பிறகு மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவு செய்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதற்குள் சூரியன் உதயமாம் வெளுத்துவிட்டிருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து (தவறிப் போன ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன்) தொழுதார்கள்.113


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக