ஓரிறைக் கோட்பாடு
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7472அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார்.
அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன்.
அப்போது மூஸா(அலை) அவர்கள் (அல்லாஹ்வின்) அரியாசனத்தின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா? அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடைத் தேவையில்லையென்று) விதிவிலக்கு அளித்திருப்பானா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.114
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7473 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனாவிற்கு தஜ்ஜால் வருவான். வானவர்கள் மதீனாவைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, தஜ்ஜாலும் கொள்ளைநோயும் அல்லாஹ் நாடினால் மதீனாவை நெருங்க முடியாது.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.115
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7474 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்திக்குக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனைய மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.116
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7475 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை நான் ஒரு கிணற்றின் அருகே கண்டேன். (அதிலிருந்து) நான் இறைக்க வேண்டுமென அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் புதல்வர் (அபூ பக்ர்(ரலி) அவர்கள்) அதை (வாளியை) எடுத்துக் கொண்டு (அதிலிருந்து) 'ஒரு வாளி நீரை' அல்லது 'இரண்டு வாளிகள் நீரை' இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் (அவரின் சோர்வை) அவருக்கு மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்தார். அப்போது அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டிருந்தது. அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படுகிற புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி,) உமர் அவர்களைச் சுற்றிலும் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)117
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7476அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் 'யாசகம் கேட்பவர்' அல்லது 'தேவையுடையவர்' யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி,) '(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகிறான்' என்று கூறுவார்கள். 118
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7477 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.119
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7478உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
'மூஸா(அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களின் அந்தத் தோழர் யார்? அவர் 'களிர்' அவர்கள் தாமா?' என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஹுர்ரு இப்னு கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபட்டு தர்க்கித்துக் கொண்டார்கள். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ்(ருலி) அவர்கள் அழைத்து, 'நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரின் நிலைக் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?' என்று வினவினார்கள். உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.
ஆம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூஸா(அலை) அவர்கள் இருந்தபோது ஒருவர் வந்து 'உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, மூஸா(அலை) அவர்கள், 'இல்லை (என்னை விட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)' என்றார்கள். உடனே மூஸா(அலை) அவர்களுக்கு 'இருக்கிறார். அவர்தாம் நம் அடியார் 'களிர்' ஆவார்' என்று வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது. அப்போது மூஸா(அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கினான். அவர்களிடம், 'நீங்கள் எந்த இடத்தில் மீனைத் தொலைக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லுங்கள். அங்கு களிர் அவர்களைச் சந்திப்பீர்கள்' என்று கூறப்பட்டது. அவ்வாறே மூஸா(அலை) அவர்கள் கடலில் மீனின் சுவட்டைப் பின்பற்றியபடியே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களிடம் 'நாம் அந்தப் பாறையின் பக்கம் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களுக்குக்) கூறவிடாமல் ஷைத்தான்தான் எனக்கு மறதியைத் தந்துவிட்டான்; அது(அவ்விடத்தில் கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன்னுடைய வழியை அமைத்துக் கொண்டது' என்றார். மூஸா(அலை) அவர்கள், 'அதுதான் நாம் தேடி வந்த இடம்' என்று சொல்ல, இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர்(அலை) அவர்களைக் கண்டார்கள். (திருக்குர்ஆன் 18:63-65) பிறகு அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 120
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7479அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்ல (திட்டமிட்டபோது) 'அல்லாஹ் நாடினால் நாளை நாம் பன} கினானா பள்ளத்தாக்கின் அருகே தங்குவோம். அந்த இடத்தில் தான் குறைஷியர் 'நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்' என்று சூளுரைத்தார்கள்' என்று முஹஸ்ஸப் பள்ளத்தாக்கைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்.121
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7480அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால் அதை அவர்கள் வெற்றிகொள்ளவில்லை. அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்' என்றார்கள். முஸ்லிம்கள், 'நாம் (கோட்டையை) வெற்றிக்கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங்கள்' என்றார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி(ஸல்) அவர்களை (அச்சமயம்) 'அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்' என்றார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.122
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7481 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால் வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்)
மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த ஒசை அவர்களைப் போய்ச் சேரும். (அப்போது வானவர்கள் பீதியடைகிறார்கள்.) பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது 'உங்களுடைய இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகிறார்கள். 'உண்மையே சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்' என்று கூறுவர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.124
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இக்ரிமா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: மேற்கண்ட (திருக்குர்ஆன் 34:23 வது) வசனத்தின் மூலத்தில் 'ஃபுஸ்ஸிஅ' (அச்சம் அகற்றப்படும் போது) என்பதை 'ஃபுர்ரிஃக' (அகற்றப்படும் போது) என ஓதினார்கள்.
சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே எங்களின் ஓதல் முறையாகும்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7482 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், தன் தூதர் இனியகுரலில் குர்ஆனை ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்பதைப் போன்று வேறு எதையும் அவன் செவிமடுத்துக் கேட்டதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் தோழர் ஒருவர் 'இது குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆன் ஓதுவதைக் குறிக்கின்றது' என்கிறார்.125
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7483 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), 'ஆதமே!' என்று அழைப்பான். ஆதம்(அலை) அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்' என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில் 'உங்கள் சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்ட இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என அறிவிக்கப்படும்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.126
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7484ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் இறைவன் கதீஜா அவர்களுக்கு சொர்க்கத்தில் (முத்து) மாளிகை ஒன்று இருப்பதாக நற்செய்தி அறிவிக்கச் சொன்னான்.
இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.127
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7485 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.128
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7486 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்,' என்று அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே - கேட்பான். அதற்கு வானவர்கள், 'அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்' என்று பதிலளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7487 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். 'அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?' என்று நான் கேட்க, ஜிப்ரீல் 'ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே' என்று பதிலளித்தார்கள்.
என அபூ தர்(ரலி) அறிவித்தார். 130
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7488பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, 'இன்னாரே! நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'இறைவா! நான் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் முகத்தை உன்னிடமே திருப்பினேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன் வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்' என்று பிரார்த்தியுங்கள். ஏனெனில், (இவ்விதம் பிரார்த்தித்து) அன்றைய இரவில் நீங்கள் இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர்கள். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் இந்தப் பிரார்த்தனைக்கான நற்பலனைப் பெற்றுக் கொள்வீர்கள்' என்றார்கள்.131
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7489அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) 'அஹ்ஸாப்' போர் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.132
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7490இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஓ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் 'நீங்கள் உங்கள் தொழுகையிலும் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள். அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். எனவே, இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்' எனக் கட்டளையிட்டான். 133
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7491 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்' என்று அல்லாஹ் கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.134
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7492 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவேவிட்டுவிடுகிறார்' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.
என அபூ ஹுரைரரா(ரலி) அறிவித்தார்.135
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7493 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத் தூதர்) அய்யூப்(அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்களின் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தங்களின் ஆடையில் அள்ளத் தொடங்கினார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து, 'அய்யூப்! நீங்கள் பார்க்கிற இந்தத் தங்கக்கால் உங்களுக்குத் தேவைப்படாத அளவிற்கு உங்களை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?' என்று கேட்க, அவர்கள் 'ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!' என்று பதிலளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.136
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7494 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.137
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7495 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.138
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7496இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:
'(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்' என அல்லாஹ் கூறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக