பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

நீதியும் நிர்வாகமும் 7188-7213


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7188 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7189அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பன} ஜதீமா குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்களை அழைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்களுக்கு 'அஸ்லம்னா' ('நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்') என்று திருத்தமாகச் சொல்லவரவில்லை. எனவே, அவர்கள், 'ஸபஃனா' 'ஸபஃனா' ('நாங்கள் மதம் மாறி விட்டோம். நாங்கள் மதம் மாறிவிட்டோம்') என்றார்கள். உடனே, காலித்(ரலி) அவர்கள் அம்மக்களைக் கொல்லவும் சிறைப்பிடிக்கவும் தொடங்கினார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவரால் கைது செய்யப்பட்டவரை ஒப்படைத்தார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டேன். என் தோழர்களில் எவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டார்' என்று சொன்னேன். இதை நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று) தெரிவித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! 'காலித் இப்னு வலீத்' செய்த(த)வற்றுக்கும் எனக்கும் தொடர்பில்லையென்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று இருமுறை சொன்னார்கள்.55


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7190ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
பன} அம்ர் இப்னு அவஃப்) குலத்தாரிடையே மோதல் ஏற்பட்டிருந்த விவரம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது லுஹ்ருத் தொழுகையை நடத்திவிட்டு அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகச் சென்றார்கள். இதற்கிடையே அஸ்ருத் தொழுகையின் நேரம் வந்துவிடவே பிலால்(ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுத்தார்கள். பிறகு இகாமத் சொல்லிவிட்டு (நபியவர்கள் வெளியே சென்றுவிட்டதால்) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (தொழுகை நடத்துமாறு) கூறினார்கள். எனவே, அபூ பக்ர் (தொழுகை நடத்த) முன்னின்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகையில் (இமாமாக) இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (திரும்பி) வந்துவிட்டார்கள். (தொழுகை அணிகளை) விலக்கிக்கொண்டு வந்து (இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலுள்ள (முதல்) அணியில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக) கைத் தட்டினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகத் தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். ஆனால், மக்கள் நிறுத்தாமல் கைதட்டிக் கொண்டிருக்கக் கண்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி) அங்கேயே நின்று தொழுகையைத் தொடருமாறு (தம் கையால்) சைகை செய்தார்கள். இதோ இவ்வாறுதான் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் அங்கேயே சிறிது நேரம் இருந்து, நபி(ஸல்) அவர்கள் (தம்மைத் தொழுகை நடத்துமாறு) கூறியமைக்காக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு திரும்பாமல் அப்படியே பின்னோக்கி (முதல் அணிக்கு) நடந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
தொழுது முடிந்ததும், 'அபூ பக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தும் நீங்கள் தொழுகையைத் தொடராமல் இருந்ததற்குக் காரணம் என்ன?' என்று கேட்டார்கள். 'நபி(ஸல்) அவர்களுக்கே தலைமை தாங்கித் தொழுகை நடத்தும் தகுதி அபூ குஹாஃபாவின் மகனுக்கு (எனக்கு) இல்லை' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களிடம், '(தொழுகையில்) உங்களுக்கு சந்தேகம் ஏற்படுமானால் ஆண்களாயிருந்தால், அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லட்டும். பெண்களாயிருந்தால், (இமாமின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்) கைத் தட்டட்டும்!' என்றார்கள்.56


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7191(வேத அறிவிப்பை எழுதியோரில் ஒருவரான) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
யமாமா(போரில்) வீரர்கள் கொல்லப்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அழைத்து வரும்படி) ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போர், குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டது. (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி (அந்த நெஞ்சங்களுடன் அழிந்து) போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?' என்று (உமர்(ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று கூறினார்கள். இது விஷயமாக தொடர்ந்து உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர்(ரலி) அவர்கள் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான்; எது விஷயத்தில் உமர்(ரலி) அவர்கள் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன்.
பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, (தனித்தனி பிரதிகளில் பல்வேறு நபித்தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்' என்றார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணிந்திருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது. அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்றார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர்(ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கருதினேன்.
எனவே, நான் (மக்களின் கரங்களிலிருந்து குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அகலமான பேரீச்சமட்டைகள், துண்டுத் தோல்கள் ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் அத்தவ்பா எனும் (9 வது) அத்தியாத்தின் இறுதி அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன். 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:128 வது) வசனமே அந்த வசனமாகும்.
(என் வாயிலாகத் திரட்டிக் தொகுக்கப் பெற்ற) குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்துவந்தது. பிறகு (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்துவந்தது. பிறகு (நபிகளாரின் துணைவியரான) ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் இருந்துவந்தது.
முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்கள், 'இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'லிகஃப்' எனும் சொல்லுக்கு 'ஓடு' என்று பொருள் எனக் கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7192ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்துவிட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டுவிட்டார்' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை' என்றார்கள்.
பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்களே)' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.58


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7193-7194அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
கிராமவாசி ஒருவர் (நபியவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்' என்றார். அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். அந்தக் கிராமவாசி 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது அவன் இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) 'உன் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்' என்று என்னிடம் மக்கள் சொன்னார்கள். எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, 'என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும்' என்று கூறினார்' என்றார்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்பபளிக்கிறேன்: அந்த அடிமைப் பெண்ணும் (நூறு) ஆடுகளும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்' என்று கூறிவிட்டு, (தமக்கருகிலிருந்த அஸ்லம் குலத்தாரான உனைஸ்(ரலி) அவர்களைப் பார்த்து) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, (அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால்,) அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்' என்றார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.59


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7195ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.
உமர்(ரலி) அவர்கள் தம்மிடம் அலீ(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் இருக்க, (மொழி பெயர்ப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாத்திப்(ரலி) அவர்களிடம்), 'இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்' என்றார்கள்.
அபூ ஜம்ரா(ரலி) அவர்கள், 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் அவர்களிடம் தீர்ப்பு கேட்டுவரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்துவந்தேன்' என்று கூறுகிறார்கள்.
சிலர், 'ஆட்சியாளர் மற்றும் நீதிபதிக்கு இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை ஒருவர் போதாது)' என்று கூறுகின்றனர்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7196இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) கூறினார்: (ரோம் நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, 'நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துவிட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு' என்றார். பிறகு முழு ஹதீஸையும் சொன்னார். (இறுதியில்) அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'நீர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னுடை இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர்(முஹம்மத்) அதிபராம்விடுவார் என அவரிடம் சொல்' என்றார்.60


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7197அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இப்னுல் லுதபிய்யா (அல்லது இப்னுல் உதபிய்யா(ரலி) அவர்களை பன} சுலைம் குலத்தாரின் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். (அவர் பன}சுலைம் குலத்தாரிடம் சென்று ஸகாத் பொருட்களை வசூலித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அப்போது இப்னுல் லுதபிய்யா(ரலி) அவர்கள், 'இது உங்களுக்காக உள்ளது; இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (உங்களின் வாதத்தில்) உண்மையாளராக இருந்தால் நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத் தேடி அன்பளிப்பு வருகிறதா பாருங்கள்' என்றார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'இறைவனைப் போற்றிய பின் கூறுகிறேன்: அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றுக்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கிறேன். ஆனால், அவர் (போய்விட்டு) வந்து இது உங்களுக்கு; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறாரே! அவர் வாய்மையான வராயிருந்தால் தம் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்துகொண்டு தம்மைத் தேடி அன்பளிப்பு வருகின்றதா? என்று பார்க்கட்டுமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரும் அதிலிருந்து எதையும் முறையின்றி எடுக்கக் கூடாது அப்படி எடுப்பவர் மறுமைநாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்விடம் வருவார். அறிக! (அன்று) அல்லாஹ்விடம் கத்தும் ஒட்டகத்துடனும் மாட்டுடனும் ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் அறிவேன்' என்றார்கள்.
பின்னர், நாங்கள் நபியவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, '(இறைவா!) நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று (வானை அண்ணாந்து நோக்கிக்) கேட்டார்கள்.61


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7198 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை (ஆட்சிக்கு)ப் பிரதிநிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.62
இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்கள் வரியாகவும் வந்துள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7199உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளையைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தோம்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7200உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார்.
நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.64


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7201அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (அகழ் வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காகக்) குளிர்ந்த காலைப் பொழுதில் வெளியே சென்றார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
(அதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (நிலையான) நன்மை என்பது மறுமை (வாழ்வின்) நன்மையே. எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!' என்று (பாடிய படி) சொன்னார்கள்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நபித்தோழர்கள், 'நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோம் என முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்' என்று கூறினர்.65


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7202அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்' என்று சொல்வது வழக்கம்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7203அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் நான் இப்னு உமர்(ரலி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், 'நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்' என்று எழுதித் தந்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7204ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று அதற்குத் கீழ்ப்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது 'என்னால் இயன்ற விஷயங்களில்' என்றும் 'முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன்' என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம் அவர்கள் கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7205 அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு மக்கள் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது அவருக்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கடிதம் எழுதினார்கள்: அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு... நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும், அவனுடைய தூதர் காட்டிய வழியின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல மலிக்கின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். என் மக்களும் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7206யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம் நான், 'எந்த விஷயத்திற்காக நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யா நாளில் உறுதி மொழி அளித்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(இறைவழியில்) உயிர் நீக்கத் தயாராக இருப்பதாக உறுதிமொழி அளித்தோம்' என்று பதிலளித்தார்கள்.66


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7207மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்திடும்) பொறுப்பை ஒப்படைத்திருந்த (ஆறு பேர் கொண்ட) குழுவினர் ஒன்றுகூடி தமக்குள் கலந்தாலோசித்தனர்.67 அவர்களிடம் அக்குழுவில் இடம்பெற்றிருந்த) அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், 'நான் இந்த ஆட்சியதிகாரத்திற்காக உங்களுடன் போட்டியிடக்கூடியவன் அல்லன். ஆயினும், நீங்கள் விரும்பினால் உங்களிலிருந்தே ஒருவரை நான் உங்களுக்கு (ஆட்சித் தலைவராக)த் தேர்ந்தெடுக்கிறேன்' என்றார்கள். எனவே, குழுவினர் அந்தப் பணியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப(ரலி) அவர்கள் வசம் தங்கள் விவகாரத்தை அவர்கள் ஒப்படைத்துவிட்டபோது மக்கள் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களையே மொய்க்கத் தொடங்கிவிட்டனர். எந்த அளவிற்கென்றால், மக்களில் எவருமே அக்குழுவினரைப் பின்தொடர்ந்ததாகவோ அவர்கள் பின்னே சென்றதாகவோ நான் காணவில்லை. அந்த நாள்களில் அவரிடம் மட்டுமே மக்கள் ஆலோசனை கலந்தபடி அவரையே சுற்றிவரத் தொடங்கிவிட்டனர். எந்த நாள் காலையில் நாங்கள் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து அளித்தோமோ அன்றைய இரவு சிறிது நேரம் தூங்கிய பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் வந்து திடீரென என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
நான் விழித்துக்கொண்டேன். என்னிடம் அவர்கள், 'நீங்களோ உறங்குகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு என்னைப் பெரிய அளவில் தூக்கம் தழுவவில்லை. நீங்கள் போய் ஸுபைர் இப்னு அவ்வாமையும் ஸஅத் இப்னு அபீ வக்காஸையும் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல, நான் போய் அவர்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் அழைத்துவந்தேன். பிறகு அவ்விருவருடன் கலந்தாலோசித்துவிட்டு என்னை அழைத்து, 'அலீ(ரலி) அவர்களை என்னிடம் அழைத்துவருக' என்றார்கள். அவ்வாறே நான் அலீ(ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடம் நடுநிசிவரை ஆலோசனை செய்தார்கள். பிறகு அலீ(ரலி) அவர்கள் (ஆட்சிப் பொறுப்பேற்க) ஆவல் கொண்டவர்களாக அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களிடமிருந்து எழுந்தார்கள். அலீ(ரலி) அவர்களிடமிருந்து ஏதேனும் பிரச்சினை வருமோ என அப்துர் ரஹ்மான் அஞ்சியிருந்தார்கள். பிறகு, 'உஸ்மான்(ரலி) அவர்களை என்னிடம் அழைத்துவருக' என்றார்கள். நானும் அவ்வாறே நான் அலீ(ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடம் நடுநிசிவரை ஆலோசனை செய்தார்கள். பிறகு அலீ(ரலி) அவர்கள் (ஆட்சிப் பொறுப்பேற்க) ஆவல் கொண்டவர்களாக அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களிடமிருந்து எழுந்தார்கள். அலீ(ரலி) அவர்களிடமிருந்து ஏதேனும் பிரச்சினை வருமோ என அப்துர் ரஹ்மான் அஞ்சியிருந்தார்கள். பிறகு, 'உஸ்மான்(ரலி) அவர்களை என்னிடம் அழைத்துவருக' என்றார்கள். நானும் அவ்வாறே உஸ்மான்(ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடமும் ஆலோசனை செய்தார்கள். இறுதியில், சுப்ஹுத் தொழுகைக்கு பாங்கு சொன்னவர் சொல்ல அவ்விருவரும் கலைந்தனர். அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்திய பின்னர் அந்த ஆலோசனைக் குழுவினர் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே ஒன்று கூடினார்கள். பின்னர் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் அங்கு வந்திருந்தவர்களிடமும் மாகாணங்களின் ஆளுநர்களிடமும் ஆளனுப்பினார்கள். அந்த ஆளுநர்கள் (மக்கா வந்து) அந்த ஹஜ்ஜில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டிருந்(துவிட்டு மதீனா வந்திருந்)தனர்.68 அவர்கள் ஒன்றுகூடியபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறிவிட்டுப் பிறகு, 'இறைவனைத் துதித்த பின் கூறுகிறேன்: அலீ(ரலி) அவர்களே! நான் மக்களின் கருத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் உஸ்மானுக்குச் சமமாக எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, உங்கள் உள்ளத்தில் (என் மீது) வருத்தம் ஏதும் கொள்ளவேண்டாம்' என்று கூறினார்கள்.
பிறகு (உஸ்மான்(ரலி) அவர்களை நோக்கி), 'அல்லாஹ் வகுத்த வழிமுறைப்படியும் அவனுடைய தூதரின் நடைமுறைப்படியும் அவர்களுக்குப் பின்னுள்ள கலீஃபாக்கள் இருவரின் நடைமுறைகளின் படியும் உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். இப்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய முஹாஜிர்கள், அன்சாரிகள், மாகாண ஆளுநர்கள், முஸ்லிம்கள் என்று மக்கள் அனைவரும் (உஸ்மான்(ரலி) அவர்களுக்கு) விசுவாசப் பிரமாணம் செய்தனர்.69


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7208 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதி மொழி அளித்தோம். அப்போது அவர்கள் என்னிடம், 'ஸலமாவே! நீங்கள் உறுதிமொழி அளிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! முதல் முறையிலேயே நான் உறுதிமொழி அளித்து விட்டேன்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டாவது முறையும் உறுதிமொழி அளியுங்கள்' என்றார்கள்.70


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7209ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அந்தக் கிராமவாசி, 'என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் வந்து 'என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, அந்த மனிதர் (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மதீனா, கொல்லனின் உலை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்தும்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7210நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.
என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத்(ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! இவனிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்' என்று கூற, நபி(ஸல்) அவர்கள், 'இவன் சிறுவனாயிற்றே' என்று சொல்லிவிட்டு, (அன்போடு) என் தலையை வருடிக்கொடுத்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.72
(அறிவிப்பாளர் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தம் குடும்பத்தார் அனைவருக்காகவும் குர்பானி கொடுத்துவந்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7211ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் கண்டது. உடனே அந்தக் கிராமவாசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் (மீண்டும்) வந்து 'இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு (மூன்றாம் முறையாக) அவர் நபியவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மதீனா, கொல்லனின் உலை போன்றதேயாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகின்றது' என்றார்கள்.73


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7212 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மூன்றுபேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.
ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவன் ஆவான்.
இன்னொருவன் (ஆட்சித்) தலைவரிடம் தன்னுடைய உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிராமணம் செய்துகொண்டவன். தான் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பான்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசகமா நடக்கமாட்டான்.
மற்றொருவன் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தன்னுடைய வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, 'இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்)பட்டது' என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையென நம்பவைத்து (தன் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவன் ஆவான்.74


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7213உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ஓர் அவையில் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளை (வறுமைக்கு அஞ்சி)க் கொல்லமாட்டீர்கள்; நீங்கள் எவர் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள்; நன்மையான காரியத்தில் (தலைவருக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளியுங்கள். உங்களில் (இந்த உறுதிமொழிக்கேற்ப நடந்து) அதை நிறைவேற்றுகிறவருக்கு நற்பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து உலம்லேயே அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனையே அவரின் (குற்றத்திற்குப்) பரிகாரமாக ஆகிவிடும். அதில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அதை (உலகில்) மறைத்துவிட்டால் அவரின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகும். அவன் நாடினால் அவரை தண்டிப்பான். நாடினால் அவரை மன்னிப்பான்.
எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அதன்படி உறுதிமொழி அளித்தோம்.76


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக